கோரம்பள்ளம் குளத்து பாசன நிலத்தில் தண்ணீரின்றி கருகிவரும் வாழைகள்-விவசாயிகள் வேதனை

ஸ்பிக்நகர் : தூத்துக்குடி அருகே கோரம்பள்ளம் குளத்திற்கு உட்பட்ட பாசன நிலங்களில் தண்ணீரின்றி வாழைகள் கருகும் அவலம் தொடர்கிறது. இதனால் வேதனையில் தவிக்கும் விவசாயிகள், விரைவாக தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.தூத்துக்குடி மாவட்டத்தில் கடல் சார்ந்த தொழில்களும், விவசாயம் சார்ந்த தொழில்களும் பிரதானமாக விளங்கி வருகிறது. விவசாயத்தில் நெல், வாழை, உளுந்து உள்ளிட்டவை அதிகமாக பயிரிடப்படுகிறது. கடந்த சில வருடங்களாகவே விவசாயத்தில் நஷ்டத்தையே விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். இதனால் சொந்த நிலங்கள் வைத்திருந்தவர்கள் பலர் தங்களின் பணத்தேவைக்காக கட்டுகுத்தைக்கும், ஒத்திக்கும் கொடுத்துள்ளார்கள்.

தற்போது தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாத நிலையே நிலவி வருகிறது. கோரம்பள்ளம் குளத்தின் பாசன பகுதிகளான கோரம்பள்ளம், வீரநாயக்கந்தட்டு, காலாங்கரை, அத்திமரப்பட்டி, பொட்டல்காடு, குலையன்கரிசல் உள்ளிட்ட பகுதிகளில் தற்போது விவசாயம் செய்வதற்கு தண்ணீர் இல்லாத சூழல் நிலவி வருகிறது.

இந்த பகுதிகளில் உள்ள ஒருசிலர் சொட்டுநீர் பாசன முறையை பின்பற்றி விவசாயம் செய்கின்றனர். மீதமுள்ளவர்கள் எப்போது தண்ணீர் வரும் என எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இதனால் பச்சையாக காட்சியளித்த நிலங்கள் தற்போது காய்ந்த சருகுகளாக காட்சியளிப்பது வேதனையளிக்கிறது.

இதற்கு கடந்த ஆண்டுகளில் போதுமான மழைபெய்தும் அதனை சேகரித்து வைப்பதற்கு கோரம்பள்ளம் குளத்தை முறையாக தூர்வாராததே காரணம் என்று கூறப்படுகிறது. இந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு கோரம்பள்ளம் குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது கோரம்பள்ளம் குளத்தின் பாசனத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வாழை பயிரிடப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் விவசாயத்திற்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். எனவே விவசாயத்திற்கு உடனடியாக தண்ணீர் திறந்துவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: