டெங்கு காய்ச்சல் அறிகுறி இருந்தால் அரசு மருத்துவமனையை அணுகுங்கள்-சித்த மருத்துவர் அறிவுரை

விராலிமலை : டெங்கு காய்ச்சல் அறிகுறி இருந்தால் உடனே அருகிலுள்ள அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்கள் அணுகுமாறு பரம்பூர் ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் சுயமரியாதை பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.அன்னவாசல் ஒன்றியம் கடம்பராயன்பட்டி பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நேற்று முன்தினம் நடைபெற்றது. முகாமில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி பரம்பூர் ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவர் சுயமரியாதை பேசியதாவது:

பருவகால மாற்றத்தின் காரணமாக மழை காலங்களில் ஏடிஎஸ், ஈஜிப்டி போன்ற கொசுக்கள் கடிப்பதன் மூலம் டெங்கு எனப்படும் வைரஸ் காய்ச்சல் பரவுகின்றது. காய்ச்சல், தலைவலி, கண்களின் பின்புறம் அதிகவலி, கண்களை அசைக்கும்போது வலி, வாந்தி, குமட்டல், தூக்கமின்மை, பசியின்மை, கை, கால் மற்றும் இடுப்புப் பகுதியில் வலி, தோல், மூக்கு மற்றும் பல் ஈறுகளில் இருந்து ரத்தக் கசிவு, ஆசனவாயில் மற்றும் நீர்தாரையில் ரத்த கசிவு இருந்தால் இவை டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஆகும். டெங்கு நோய் பரவாமல் இருக்க வீட்டின் அருகே உள்ள மழைநீர் அதிகமாக தேங்குவதை தவிர்த்தல் வேண்டும்.

டயர், தேங்காய் மட்டை, அம்மிக்கல், உரல், டீ கப், பாலித்தீன் பை, பிளாஸ்டிக் கப், டிரம் மற்றும் சிமெண்ட் தொட்டி போன்ற பொருட்களில் நீர் தேங்காமல் தடுக்க வேண்டும். வீட்டின் குளிர்சாதனப் பெட்டியின் பின்புறம் அடியில் உள்ள நீர் சேகரிக்கும் குப்பியில் நீரை அடிக்கடி சுத்தம் செய்தல் வேண்டும். நீர் நிலைகளில் கொசு தேங்காமல் தடுக்க வேண்டும்.கொசுக்களை அழிக்க வேப்பிலை,நொச்சி,தும்பை ஆகியவற்றின் இலைகளைப் கொண்டு புகை போடுதல் வேண்டும். டெங்கு காய்ச்சல் வந்தவர்கள் நில வேம்பு குடிநீர் குடிக்க வேண்டும் .நில வேம்பு குடிநீரை பருகுவதால் டெங்கு காய்ச்சல் மட்டுமல்லாது அனைத்து வைரஸ் காய்ச்சலும் குணமாகும்.

டெங்கு பாதித்த நபருக்கு பப்பாளி இலையின் சாரை கொடுக்க வேண்டும். டெங்கு பாதித்தவர்கள் மலைவேம்பு இலைச்சாறை 10 மிலி.வீதம் ஒரு நாளைக்கு 2 அல்லது 3 முறை மொத்தம் 5 நாட்களுக்கு கொடுக்க வேண்டும். எனவே டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்கள் உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுகி பயன்பெற வேண்டும். மேலும் கொரோனாவிலிருந்து நம்மை பாதுக்காக்க அனைவரும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும். அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். அனைவரும் தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என பொதுமக்களை கேட்டுக்கொண்டார்.முகாமில் மருத்துவமனை பணியாளர்கள் காயத்திரி, சிவசாமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

More
>