தா.பழூர் பகுதியில் சாலையில் உலர்த்தப்படும் விவசாய விளை பொருட்களால் விபத்து அபாயம்-நடவடிக்கை எடுக்க வாகனஓட்டிகள் வலியுறுத்தல்

தா.பழூர் : அரியலூர் மாவட்டம் தா.பழூர் மற்றும் அதை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் சாலையில் காயவைக்கப்படும் சோளம், கம்பு, நெல், கடலை, எள் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் விளைவிக்கும் பொருட்களை சாலையில் காயவைப்பதாலும், இரவு நேரங்களில் சாலையில் குவித்து வைப்பதாலூம் தொடர் விபத்துகள் நடந்து வருகிறது.

தா.பழூரில் இருந்து ஜெயங்கொண்டம் செல்லும் சாலை, தா.பழூரில் இருந்து காரைக்குறிச்சி வழியாக புரந்தான் முத்துவாஞ்சேரி, வழியாக அரியலூர் செல்லும் சாலை, தா.பழூரில் இருந்து சுத்தமல்லி, வழியாக அரியலூர் செல்லும் சாலை என அனைத்து சாலை ஓரம் உள்ள கிராமங்களும் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருட்களை சாலையில் கொட்டி உலர்த்தி வருகின்றனர்.

சாலையில் நடுவே உள்ள வரைவு கோடு வரை சோளம், எள், கடலை உள்ளிட்ட பொருட்களை விவசாயிகள் காய வைப்பதால் அதன் மீது வாகனங்கள் ஏறி சென்றுவிடா வண்ணம் தடுக்க பெரிய அளவிலான கல், மரக்கட்டைகள் ஆகியவற்றை பயன்படுத்தி வருகின்றனர். பகல் நேரங்களில் வாகனங்கள் சாலையில் செல்லும் பொழுது இது நீண்ட தூரத்திற்கு பொருட்களை காய வைத்து இருப்பதால் ஒருபுறம் வாகனங்கள் நின்று சென்ற பின்பே மறுபுறம் உள்ள வாகனம் செல்ல வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.மேலும் விளைவித்த பொருட்களை பாதுகாக்க சாலையோரம் வைக்கப்பட்டுள்ள மரக்கட்டைகள் மற்றும் கைகளில் இரண்டு சக்கர வாகன ஓட்டிகள் மோதி விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

இது ஒரு புறமிருக்க இரவு நேரங்களில் காயவைத்த விளை பொருட்களை எடுத்துச் செல்லாமல் சாலையின் நடு பகுதியிலேயே முட்டாக குவித்து அவற்றின் மீது படுதாவை போர்த்தி வைத்துள்ளனர். இவை இரவு நேரங்களில் சாலையில் செல்பவர்களுக்கு சரியாக தெரியாததால் முட்டாக குவித்து வைத்துள்ள குவியல் மீது மோதி விபத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.மேலும் வாகனங்கள் முட்டுகளின் மீது மோதி விடாமல் தடுக்கும் பொருட்டு பெரிய அளவில் கற்கள் மற்றும் பெரிய மரக்கட்டைகளை வைத்துள்ளனர். இரவு நேரங்களில் உள்ள இருட்டில் அவை சரியாக தெரியாததால் பெரிய அளவில் விபத்துகள் நடந்து வருகிறது. இது குறித்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இவாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: