முதுகெலும்பை முறிக்கும் உக்கடம்-செல்வபுரம் பைபாஸ் சாலை

கோவை : கோவை மாநகர் உக்கடம் மற்றும் டவுன்ஹால் பகுதியில் இருந்து வைசியாள் வீதி வழியாக செல்வபுரம் செல்ல கடும் போக்குவரத்து நெரிசலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இதை தவிர்க்க, உக்கடத்தில் இருந்து புட்டுவிக்கி வழியாக செல்வபுரத்துக்கு பைபாஸ் ரோடு கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. தற்போது, உக்கடம் மேம்பாலம் கட்டுமான பணி நடப்பதால் பொள்ளாச்சி, பாலக்காடு மார்க்கமாக செல்லும் வாகனங்களுக்கு இச்சாலை வழியாகத்தான் திருப்பி விடப்படுகிறது.

உக்கடம் பஸ் நிலையத்தில் இருந்து கரும்புக்கடையை நோக்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், பஸ், லாரி உள்ளிட்ட அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் இச்சாலை வழியாகத்தான் செல்கின்றன. மாநகராட்சி அதிகாரிகள், இச்சாலையை சீரமைப்பதில் மெத்தனம் காட்டி வருகின்றனர். இச்சாலையை அகலப்படுத்துவது, மழைநீர் வடிகால் கட்டி, சாலையில் மழைநீர் தேங்காத வண்ணம் தடுப்பது போன்ற நடவடிக்கை எடுக்கவில்லை.

 

இதன்காரணமாக, தற்போது பெய்த சிறு மழைக்குக்கூட இச்சாலை தாங்கவில்லை. மழைநீர் வடிந்து செல்ல, வடிகால் இல்லாத காரணத்தால், சாலையில் தேங்குகிறது. தண்ணீரில் நீந்தி, கனரக வாகனங்கள் பயணிப்பதால், இச்சாலை அடுத்தடுத்து உடைந்து நொறுங்குகிறது. எந்த இடத்தில் மேடு, பள்ளம் இருக்கிறது என தெரியாத அளவுக்கு மழைநீர் தேங்கி கிடப்பதால், இருசக்கர வாகன ஓட்டிகள் திக்குமுக்காடுகின்றனர். தடுமாறி கீழே விழுகின்றனர். குறிப்பாக, பெண்கள், படாதபாடு படுகின்றனர்.

இச்சாலை வழியாக தமிழக கவர்னர் ஆர்.ரவி நேற்று காலை பயணித்து, ஈஷா யோகா மையம் சென்றார். அவர், வருகிறார் என்ற தகவல் கிடைத்ததும் மாநகராட்சி அதிகாரிகள், அவசரம் அவசரமாக செயல்பட்டு, லாரிகள் மூலம் மணல் அள்ளிக் கொண்டு வந்து, இச்சாலையில் உள்ள மேடு, பள்ளங்களை நிரப்பினர். ஆனால், சிறிது நேரத்தில் மீண்டும், படுகுழிகள் ஆங்காங்கே தெரிய துவங்கிவிட்டன.

இச்சாலையில், கனரக வாகனங்கள் தொடர்ச்சியாக பயணிப்பதால், இச்சாலை மென்மேலும் உடைந்து நொறுங்கி வருகிறது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு, நள்ளிரவு நேரத்தில் வாகன போக்குவரத்து இல்லாத சமயத்தில், இச்சாலையை அவசரமாக சீரமைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

Related Stories:

More
>