பொள்ளாச்சி சந்தையில் மாடு விற்பனை விறுவிறுப்பு

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சி மாட்டு சந்தைக்கு வியாபாரிகள் வருகை அதிகரிப்பால், மாடு விற்பனை விறுவிறுப்புடன் நடந்ததுடன், கூடுதல் விலைக்கு விற்றது.

 பொள்ளாச்சி நகராட்சி மாட்டு சந்தையில், வாரத்தில் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமைகளின் நடைபெறும் சந்தைநாளின்போது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களிலிருந்து கொண்டுவரப்படும் மாடுகளை பெரும்பாலும் கேரள வியாபாரிகளே வாங்கி செல்வார்கள்.

 கொரோனா ஊரடங்கு பெருமளவு தளர்வுக்கு பிறகு, கடந்த செப்டம்பர் மாதம் மாடுகள் வரத்து அதிகமாக இருந்தது. அந்நேரத்தில் சந்தைநாளில் சுமார் 1800 முதல் 2ஆயிரம் வரையிலான மாடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன.  ஆனால்,  இந்த மாதம் துவக்கத்திலிருந்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை காரணமாக பொள்ளாச்சி சந்தைக்கு மாடுகள் வரத்து குறைவானது. அதிலும் கடந்த ஒருவாரமாக அடுத்தடுத்து மழை பெய்ததால், இந்த வாரத்தில், நேற்று  நடந்த சந்தைநாளின்போது 1300க்கும் குறைவான மாடுகளே விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன.

இருப்பினும், மாடுகளை வாங்கி செல்ல தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கேரள மாநிலத்திலிருந்தும் வியாபாரிகள் அதிகம் வந்திருந்தனர். இதனால், வியாபாரம் விறுவிறுப்புடன் நடைபெற்றது. மேலும்,  புரட்டாசி மாதம் நிறைவடைந்து ஐப்பசி மாதம் துவக்கத்தால், கேரளா மட்டுமன்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வெளியூர் வியாபாரிகள் அதிகம் வந்தனர்.

அவர்கள் குறிப்பிட்ட விலை நிர்ணயித்து, மாடுகளை உடனுக்குடன் வாங்கி சென்றனர். இதில் பசுமாடு  ரூ.32ஆயிரத்துக்கும், காளை ரூ.38ஆயிரம் வரையிலும், எருமை ரூ.32ஆயிரம் வரையிலும், கன்று குட்டி ரூ.15 ஆயிரம் வரையிலும்விற்பனை செய்யபப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: