இயற்கை எழில் கொஞ்சும் அப்பர்பவானியில் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க கோரிக்கை

மஞ்சூர் :  அப்பர்பவானியில் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்கும் வகையில் சூழல் சுற்றுலாவை ஏற்படுத்தி சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்திற்கு வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களாக உள்ள ஊட்டி, குன்னுார் உள்ளிட்ட பகுதிகளை பார்வையிடுகின்றனர்.

இதைத்தொடர்ந்து, பெரும்பாலனோர் மஞ்சூர் பகுதியில் உள்ள அப்பர்பவானி, பென்ஸ்டாக் காட்சிமுனை, குந்தா, கெத்தை, எமரால்டு, அவலாஞ்சி அணைக்கட்டுகள் மற்றும் நீர் மின் நிலையங்கள், அவலாஞ்சி மீன் வளர்ப்பு நிலையம் மற்றும் தமிழக கேரளா எல்லையில் உள்ள கிண்ணக்கொரை உள்ளிட்ட பகுதிகளுக்கு வந்து இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க பெரிதும் ஆர்வம் காட்டுகிறார்கள். குறிப்பாக, மஞ்சூரில் இருந்து சுமார் 30 கி.மீ தூரம் உள்ள அப்பர்பவானி பகுதியில் மின்வாரியத்துக்கு சொந்தமான அணைக்கட்டு மற்றும் பச்சை, பசேல் என கண்களுக்கு பசுமையூட்டும் புல்வெளிகள், மனதை கவரும் மடிப்பு மலைகள், மலைகளில் வெள்ளி கீற்றுகளாய் தவழும் அருவிகள், சாலையில் துள்ளி திரியும் மான்கள், வரையாடுகள் உள்ளிட்ட வன விலங்குகளை காணவும் சுற்றுலா பயணிகள் பெரிதும் விரும்புகின்றனர்.

இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அப்பர்பவானிக்கு சென்று இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வந்தார்கள். இந்நிலையில், வனத்துறை சார்பில் அப்பர்பவானி செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், அப்பர்பவானி செல்லும் சாலையில் 10 கி.மீ. முன்பாக கோரகுந்தா என்ற இடத்தில் வனத்துறை சார்பில்  செக்போஸ்ட் அமைக்கப்பட்டது. இதனால், கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக அப்பர்பவானிக்கு செல்லவும் அங்குள்ள இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவதில்லை.  இதையறியாமல் அப்பர்பவானிக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் செக்போஸ்டில் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

மஞ்சூர் பகுதியின் முக்கிய சுற்றுலா தலமாக கருதப்படும் அப்பர்பவானி பகுதிக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படாததால் மஞ்சூர் பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துள்ளது.

இதனால், மஞ்சூர் பகுதியில் உள்ள ஹோட்டல்கள், டீகடை, பேக்கரிகள், தங்கும் விடுதிகள் உள்பட அனைத்து வியாபாரங்களும் பாதிக்கப்பட்டுள்ளது.  இதையடுத்து, வனத்துறையின் தடையை நீக்கி, அப்பர்பவானியில் இயற்கை காட்சிகளை கண்டு ரசிக்க சுற்றுலா பயணிகளை அனுமதிக்க வேண்டும். மேலும், சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் வனத்துறை சார்பில் அவலாஞ்சியில் மேற்கொள்ளப்பட்டு வருவதை போல் அப்பர்பவானியில் சூழல் சுற்றுலாவை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள், பொதுநல அமைப்புகள் உள்பட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

Related Stories:

More
>