கோட்டூர் அருகே சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலி, மனைவி படுகாயம்

மன்னார்குடி : திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அடுத்த 83 குலமாணிக்கம் ஊராட்சிக்குட்பட்ட தென்பாதி கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (70). இவரின் மனைவி சுந்தராம்பாள் (59). விவசாய கூலித் தொழிலாளர்களான இருவரும் கூரை வீட்டில் வசித்து வந்தனர்.இவர்கள் வீட்டிற்கு அடுத்ததாக அருமைக்கண்ணு என்பவருக்கு சொந்தமான ஒட்டு வீடு உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை காரணமாக ஒட்டு வீட்டின் சுவர் ஊறிப்போய் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் நடவு வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீட்டுக்கு வந்த மாரிமுத்துவும், சுந்தராம்பாளும் சாப்பிட்டு விட்டு தூங்கினர். அப்போது நள்ளிரவில் அருமைக் கண்ணு வீட்டின் சுவர் திடீரென இடிந்து கூரைவீட்டு மேல் விழுந்ததில் கணவன், மனைவி இருவரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து களப்பால் போலீசாரும், கோட்டூரில் இருந்து தீயணைப்பு வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அப்பகுதி இளைஞர்களின் உதவியுடன் இடிபாடுகளை அகற்றி இருவரையும் மீட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி மாரிமுத்து பரிதாபமாக உயிரிழந்தார். சுந்தராம்பாள் உயிருக்கு ஆபத்தான நிலையில் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மேற் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தகவலறிந்த எம்எல்ஏ மாரிமுத்து திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்டவர் களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் சம்பவ இடத்திற்கு சென்று இடிந்த வீட்டை பார்வையிட்டார்.இதுகுறித்து எம்எல்ஏ மாரிமுத்து கூறுகையில், இறந்த மாரிமுத்து குடும்பத்திற்கு முதலமைச்சர் ரூ 10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். படுகாயமடைந்த அவரின் மனைவியின் மருத்துவ செலவு முழுவதையும் அரசே ஏற்று உரிய இழப்பீடு தொகையும் வழங்க வேண்டும் என்றார்.

Related Stories: