நீடாமங்கலம் பகுதி கொள்முதல் நிலையங்களில் நெல் ஈரப்பதம் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு

நீடாமங்கலம் : திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்ய நேரடி நெல்கொள்முதல் நிலையங்களை திறந்தபோதிலும் மத்திய அரசு 17 சதவீதத்திற்கு மேல் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யக்கூடாது என்ற உத்தரவால் நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்லை கொள்முதல் செய்யமுடியாத நிலை உருவானது.

இதுகுறித்து விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை மேற்கொண்டு 22 சதவீதம் ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல் செய்யவேண்டி தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் கோரிக்கை விடுத்தனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் விவசாயிகளின் கோரிக்கைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்தினார். முதல்வர் ஸ்டாலினின் கோரிக்கையினை ஏற்ற மத்திய அரசு ஐதராபாத்தில் உள்ள இந்திய உணவு கழகத்தின் தரக்கட்டுப்பாட்டு தென்மண்டல இயக்குநர் எம்.எஸ்.கான் தலைமையில் மூன்று பேர் கொண்ட குழுவினர் திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வட்டத்திற்கு உட்பட்ட சோனாப்பேட்டை, முன்னாவல்கோட்டை, எடமேலையூர் உள்ளிட்ட பகுதியில் உள்ள நேரடி நெல்கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டுவந்த நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து மத்திய குழுவினர் நெல்லின் மாதிரிகளை எடுத்து கொண்டனர்.

மேலும் இதுகுறித்து மத்திய அரசிடம் தெரிவித்து நெல்லின் ஈரப்பதத்தை உயர்த்தி நெல்கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தொிவித்தனர் மத்தியகுழு ஆய்வின்போது திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன், தமிழக அரசின் வேளாண்துறை உயர் அதிகாரிகள், மாவட்ட வேளாண்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பலர் உடனிருந்தனர்.

Related Stories: