வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஊட்டி வருகை-வியாபாரிகள் மகிழ்ச்சி

ஊட்டி : சர்வதேச சுற்றுலா நகரமான ஊட்டிக்கு நாள் தோறும் பல ஆயிரம் சுற்றுலா பயணிகள் வெளிநாடுகள், வெளி மாநிலங்கள் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்துச் செல்வது வழக்கம். குறிப்பாக, 2ம் சீசனான செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதங்களில் அதிகளவு வெளி நாடுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவார்கள். இந்நிலையில், கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் யாரும் ஊட்டி வராத நிலையில், ஓட்டல், ரெசார்ட் மற்றும் காட்டேஜ் உரிமையாளர்கள் மட்டுமின்றி, இவர்களை நம்பி தொழில் செய்யும் அனைவரும் பாதிக்கப்பட்டனர்.

இந்நிலையில், தற்போது வெளி நாடுகளில் இருந்து ஊட்டிக்கு சுற்றுலா பயணிகள் வருவது துவங்கியுள்ளது. நேற்று வெளி நாடுகளை சேர்ந்த பல சுற்றுலா பயணிகள் ஊட்டி தாவரவியல் பூங்காவிற்கு வந்திருந்தனர். அவர்கள் தாவரவியல் பூங்காவில் உள்ள இத்தாலியன் பூங்கா, ஜப்பான் பூங்கா, கண்ணாடி மாளிகை உட்பட அனைத்து பகுதிகளையும் சுற்றி பார்த்தனர்.

வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் வருகை துவங்கியுள்ளதால், நீலகிரி மாவட்டத்தில் உள்ள வியாபாரிகள் மற்றும் அவர்களை நம்பி தொழில் செய்யும் பலரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் 4 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்த நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், நேற்று மிலாது நபியை முன்னிட்டு அரசு விடுமுறை என்பதால், நேற்றும் ஊட்டியில் சுற்றுலா பயணிகள் அதிகம் காணப்பட்டது. தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம் போன்ற பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நேற்று பிற்பகலுக்கு மேல் சாரல் மழை பெய்த போதிலும், அதனை பொருட்படுத்தாமல் சுற்றுலா பயணிகள் வலம் வந்தனர்.

Related Stories:

More
>