ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 27,000 மக்கள் பிரதிநிதிகள் பதவியேற்பு : தமிழ்நாட்டின் மிக வயதான ஊராட்சி மன்ற தலைவரானார் 90 வயது மூதாட்டி!!

நெல்லை: தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட 27 ஆயிரம் உள்ளாட்சி பிரதிநிதிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். தமிழகத்தில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் கடந்த அக்.6,9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. தமிழகத்தில் மொத்தம் 9 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சிகளில் 153 வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியங்களில் 1421 வார்டு கவுன்சிலர்கள், 3007 கிராம பஞ்சாயத்து தலைவர்கள், இந்த கிராம பஞ்சாயத்துக்களில் 23,211 வார்டு உறுப்பினர்கள் ஆக மொத்தம் 27,792 பதவிகளுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 9ம் தேதி நடந்தது. இந்த தேர்தலில், திமுக பிரமாண்ட வெற்றி பெற்றது. இதையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சான்றிதழ்கள் வழங்கினர்.

மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினரில் (153 பதவி) திமுக 139 இடங்களிலும், காங்கிரஸ் 9, அதிமுக 2 இடம், மற்றவை 3 பேர் வெற்றி பெற்றன. ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியில் (1421 இடங்கள்) திமுக 983 பேர், அதிமுக 212 பேர், காங்கிரஸ் 33 பேர், பாஜ 8 பேர், சிபிஎம் 4, சிபிஐ 3, மற்றவை 177 பேர் வெற்றி பெற்றுள்ளனர். ஒரு இடத்திற்கு தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது. கிராம ஊராட்சி தலைவர் பதவியில் 3007 இடங்களில் 3002 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது.5 இடங்களில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் 23211 பதவிகள். 23,185 இடங்களில் தேர்தல் நடந்தது. 26 இடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவியேற்பு விழா இன்று நடந்தது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் அந்தந்த மாவட்ட ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் கிராம ஊராட்சி அலுவலகத்தில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர். அதிலும் குறிப்பாக 90 வயது மூதாட்டியின் இன்றைய தினம் ஊராட்சி மன்ற தலைவராக பதவி ஏற்றுள்ளார். அதன்படி நெல்லை மாவட்டத்திலுள்ள சிவந்திபட்டி ஊராட்சி மன்ற தலைவராக தொண்ணூறு வயது மூதாட்டி பெருமாத்தாள் பதவி ஏற்றுக் கொண்டார்.

Related Stories:

More
>