ஒரே நாடு, ஒரே மொழி எனக்கூறும் ஒன்றிய அரசு ஒரே ஜாதி என்று சொல்ல தைரியம் உள்ளதா?: கி.வீரமணி கேள்வி

திண்டுக்கல்: ஒரே நாடு, ஒரே மொழி எனக்கூறும் ஒன்றிய அரசு ஒரே ஜாதி என கூற தைரியம் கிடையாது என்று திண்டுக்கல்லில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார். கற்போம் பெரியாரியம், ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை புத்தக வெளியீட்டு விழா திண்டுக்கல்லில் நடைபெற்றது. இதில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி கலந்துக்கொண்டு புத்தகத்தை வெளியிட்டார்.

இதனை தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பெற்றுக்கொண்டார். விழாவில் பேசிய திராவிட கழக தலைவர், தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்து 100 நாட்களுக்குள் பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றியவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று புகழாரம் சூட்டினார். பெண்கள் உள்பட அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று செய்து காட்டியவர் முதல்வர் என்றும் வீரமணி தெரிவித்தார்.

ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே ரேஷன் கார்டு என்று கூறும் ஒன்றிய அரசு ஒரே ஜாதி என சொல்ல தைரியம் உள்ளதா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். காலம் காலமாக இருந்த சனாதன கோட்டை சரிந்தது தமிழ்நாட்டில் தான் என்று கி.வீரமணி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஜாதி கட்சியினர் கூட தங்களது பெயருக்கு பின்னால் ஜாதி பெயரை போடுவது கிடையாது. இதுதான் பெரியார் உடைய சாதனை என்று அவர் கூறினார்.

Related Stories: