குமரியில் மழை சேதம்: அமைச்சர்கள் நேரில் ஆய்வு

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில்  பெய்த மழையால் ஏற்பட்ட சேதங்களை அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மனோ தங்கராஜ், செந்தில்பாலாஜி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். குமரி மாவட்டத்தில்  பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து வருவாய்த்துறை சார்பில் அனைத்துத்துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக்கூட்டம் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு, துறைவாரியாக ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்விற்கு பின்னர் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன் அளித்த பேட்டி: குமரி மாவட்டத்தில் ஏற்கனவே மழை சேதத்திற்கு பொதுப்பணித்துறைக்கு ரூ33 கோடியும், நெடுஞ்சாலைத்துறைக்கு ரூ27 கோடியும், மின்சாரத்துறைக்கு ரூ152 கோடி என மொத்தம் ரூ212 கோடி திட்ட மதிப்பீட்டை கலெக்டர் வழங்கி தமிழக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று, அந்தந்த துறைவாரியாக பட்ஜெட்களில் ஒதுக்கீடு செய்ய கூறியுள்ளோம். நாகர்கோவில் மாநகராட்சிக்கு ரூ99 கோடி ஒதுக்க முதல்வர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது நடந்துள்ள மழை சேதத்தை பார்வையிட்டு இதுபற்றிய விவரங்களை இன்று (நேற்று) முதல்வ,ரிடம் தொலைபேசியில் தெரிவித்துள்ளோம்.

 35 ஏக்கர் நெல் சாகுபடி சேதமடைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 125 ஏக்கர் வாழை மரம் மற்றும் நான்கரை ஏக்கர் மரவள்ளிக்கிழங்கு நீரில் தேங்கி பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டரை ஏக்கர் காய்கறி முழுவதும் சேதமடைந்துள்ளது. இதற்கு நிவாரணம் வழங்கப்படும். கனமழையின் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகள், பொதுமக்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், செந்தில்பாலாஜி, மனோ தங்கராஜ், விஜய்வசந்த் எம்பி, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஜோதி நிர்மலா ஆகியோர் செண்பகராமன்புதூர் பகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்டு சேதமடைந்த நெற்பயிர்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

Related Stories: