கஞ்சா, பாக்குகள், புகையிலை பொருட்கள் போதைக்கு அதிகளவில் அடிமையாகும் இளைஞர்கள்: ஒன்றிய அரசு அதிர்ச்சி தகவல்

சேலம்: இளைஞர்கள் சாராயம், கஞ்சா, புகையிலை போன்ற போதை பழக்கத்திற்கு அதிகளவில் அடிமையாகி வருவதாக ஒன்றிய அரசின் சமூகநீதித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும்இளைஞர்களிடம் மது மற்றும் போதைப்பழக்கம், கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது என்பதை, சமீபத்தில் ஒன்றிய சமூக நீதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விபரங்கள் உறுதிப்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் 15 கோடியே 1 லட்சத்து 16ஆயிரம் பேருக்கு, மது அருந்தும் பழக்கம் இருக்கிறது.

இதில் அதிகபட்சமாக உத்திரபிரதேசத்தில் 3 கோடியே 86 லட்சத்து 11ஆயிரம்  பேருக்கு இந்த பழக்கம் உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை 90லட்சம் பேருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. இதேபோல் நாடு முழுவதும் 2 கோடியே 90 லட்சம் பேருக்கு கஞ்சா  பழக்கம் உள்ளது. தமிழகத்தில் 1 லட்சத்து 4 ஆயிரம் பேருக்கு கஞ்சா பழக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அண்டை மாநிலமான கேரளாவில் 3லட்சத்து 52ஆயிரம் பேருக்கு கஞ்சா பழக்கம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திராவில் 4 லட்சத்து 43ஆயிரம் பேருக்கு கஞ்சா பழக்கம் உள்ளது. இதிலும் அதிகபட்சமாக உத்தரபிரதேசத்தில் 1 கோடியே 20லட்சத்து 31 ஆயிரம் பேருக்கு, கஞ்சா பழக்கம் உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் சுமார் 1 கோடியே 86லட்சத்து 44ஆயிரம் பேர், போதை வாஸ்துகள், மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் 1லட்சத்து 54ஆயிரம் பேருக்கு இந்தப்பழக்கம் உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 18முதல் 25வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் அதிகளவில் இது போன்ற பழக்கங்களில் சிக்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுதான் பெரும் அதிர்ச்சிக்குரிய தகவல்.

இளைஞர்களிடம் போதைப் பழக்கங்களை குறைப்பதற்காக, நாடு முழுவதும் 272 மாவட்டங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 8ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்கள், தன்னார்வலர்களாக களமிறங்கி, மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 350க்கும் மேற்பட்ட ஒருங்கிணைந்த மறுவாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து மனநல மருத்துவ விழிப்புணர்வு ஆலோசகர் சிவபாலன் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாகவே சாராயம், கஞ்சா, பான்மசாலா, குட்கா பழக்கத்திற்கு மாணவர்களும், கூலித் தொழிலாளர்களும் அதிகளவில் அடிமையாகி இருப்பதாக ஏற்கனவே ஆய்வுகள் தெரிவித்துள்ளது.

கஞ்சா புகைப்பதால் நரம்புதளர்ச்சி ஏற்படும். நினைவாற்றல் குறையும். முடிவெடுக்கும் திறன் இருக்காது. இந்த நிலை தொடர்ந்தால், மனநலம் பாதிக்கும் என்பது தெளிவாக்கப்பட்டுள்ளது. இதில் பான்பராக், குட்கா போன்ற  போதைப் பொருட்களை உட்கொள்வதால் புற்றுநோய் பரவுவது அனைவரும் அறிந்த ஒன்று. பாக்குத்தூள், பதப்படுத்தப்பட்ட புகையிலை, பூச்சிக்கொல்லி மருந்து தயாரிக்க பயன்படும் கிளாச்சு அமிலம், சாயப்பட்டறைகளில் பயன்படுத்தப்படும் கேச்சல் கெமிக்கல், மண்ணெண்ணெய், சுண்ணாம்பு, பேக்கிங் சோடா ஆகியவை குட்காவுக்கான மூலப்பொருட்கள்.

சுண்ணாம்பை கொதிக்க வைத்து, அதில் பேக்கிங் பவுடர், மண்ணெண்ணெய், பாக்குத்தூள், புகையிலை மற்றும் சில ரசாயனங்களை கலப்பார்கள். இது லேகியம் பதத்திற்கு வந்ததும் ஆற வைத்து, பொட்டலம் கட்டி விற்கிறார்கள். இதை  உண்பவர்களுக்கு புற்றுநோய் பாதிப்புகள், எளிதில் தொற்றிக் கொள்கிறது என்பதற்கு விளக்கம் தேவையில்லை. புகையிலை பொருட்களை பயன்படுத்துவதில் உலகளவில் இந்தியா 4வது இடத்தில் இருக்கிறது. உலகின் ஒட்டுமொத்த புற்றுநோய் பாதிப்பில் 25 சதவீதம் இந்தியாவில் ஏற்படுகிறது.

இந்தியாவில் 6மணி நேரத்திற்கு ஒருவர், வாய்ப்புற்று  நோயால் இறக்கிறார்  என்பதும் ஆய்வுகள் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல். இளைஞர்களும், தொழிலாளர்களும் இந்த பழக்கத்திற்கு அதிகளவில் அடிமையாகி உள்ளனர். களைப்பையும், உடல் வலியையும் தவிர்க்க, இது போன்ற போதை பொருட்கள் குறைந்த விலையில் கிடைக்கும் எளிய தீர்வு என்று நம்புகின்றனர்.

ஆனால், அதை தொடர்ந்து உண்பதால் முதலில் சளி, இருமல் பாதிப்புகளும், பின்பு கல்லீரல் பாதிப்புகளும் ஏற்படுகிறது.

இதனால் சரியாக உணவு எடுத்துக் கொள்ள முடியால், நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, கடைசியில் நரம்புத்தளர்ச்சி போன்ற பிரச்னைகளை சந்தித்து, முடிவில் விரக்தியின் உச்சத்திற்கே செல்கின்றனர்.  எனவே, இது போன்ற அபாயங்களை அனைத்து தரப்பு மக்களும் உணரவேண்டும். தங்களால் முடிந்த அளவு தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதோடு, விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முன்வர வேண்டும். இதன் மூலம் மட்டுமே அடுத்தடுத்த சந்ததிகள் சந்திக்கப் போகும் பெருத்த நோய் அபாயங்களுக்கு முடிவு கட்ட முடியும்.

இவ்வாறு சிவபாலன் கூறினார். நாடு முழுவதும் சுமார் 1 கோடியே 86லட்சத்து 44ஆயிரம் பேர், போதை வாஸ்துகள், மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் 1லட்சத்து 54ஆயிரம் பேருக்கு இந்தப்பழக்கம் உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: