தலைவாசலில் அதிமுக பொன்விழா கூட்டம்; முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்கை சட்டரீதியாக சந்திப்போம்: எடப்பாடி பழனிசாமி பேச்சு

ஆத்தூர்: ஆத்தூர் அடுத்த தலைவாசலில் அதிமுகவின் 50ம் ஆண்டு பொன்விழாவையொட்டி நடந்த பொதுக்கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். சேலம் மாவட்டம், கெங்கவல்லி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தலைவாசலில், அதிமுகவின் 50ம் ஆண்டு பொன்விழாவை முன்னிட்டு நடந்த பொதுக்கூட்டத்தில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது: அதிமுக பல்வேறு இடையூறுகளை கண்டு, அதனை முறியடித்து வளர்ந்துள்ள மாபெரும் இயக்கம்.

தமிழகத்தின் இருபெரும் தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா ஆட்சி காலத்தில், தமிழகம் இந்தியாவில் முதன்மை மாநிலமாக வளர்ந்தது. எம்ஜிஆரின் சத்துணவு திட்டம், இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஜெயலலிதா காலத்தில் பல்வேறு கல்லூரிகள் உருவாக்கப்பட்டன. தலைவாசலில் 1000 ஏக்கர் பரப்பளவில், ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை ஆராய்ச்சி கல்லூரி தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியில் இருந்த அமைச்சர்கள் மீது, லஞ்ச ஒழிப்பு துறை மூலம் பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. இதனை கண்டு அதிமுகவினர் அஞ்சமாட்டார்கள். இதை நாங்கள் சட்ட ரீதியாக சந்திக்க தயாராக இருக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

சசிகலா குறித்து வாய்திறக்காத எடப்பாடி

சசிகலா தற்போது தன்னை கட்சியின் பொது செயலாளர் எனக்கூறி அறிக்கை வெளியிடுகிறார். அவரது பேச்சுக்கு முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான எடப்பாடி பழனிசாமி, சசிகலா குறித்து நேற்றைய கூட்டத்தில் வாய் திறக்காதது கட்சி தொண்டர்களிடையே கேள்வியை எழுப்பியுள்ளது.

Related Stories:

More
>