கவர்னர் குடும்பத்துடன் பயணம் செய்த அடுத்த நாளே மலை ரயில் ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா: சுற்றுலா பயணிகள் அச்சம்

குன்னூர்:நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் நூற்றாண்டு பழமையான மலை ரயில் இயக்கப்படுகிறது. இதில், பயணம் செய்ய உள்நாடுகள் மட்டுமின்றி வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.  கொரோனா தொற்று  தற்போது குறைந்து வரும் நிலையில் தமிழக அரசு,  சுற்றுலா தலங்களை திறந்து பாதுகாப்புடன் சுற்றுலா தலங்களுக்கு செல்ல அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில், கடந்த 15ம் தேதி தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, 5 நாள் ஓய்வாக குடும்பத்துடன் நீலகிரி வந்தார். அப்பர் பவானி,  ஊட்டி தாவரவியல் பூங்கா உள்ளிட்ட இடங்களை சுற்றிப்பார்த்தார். கடந்த 17ம் தேதி ஊட்டியில் இருந்து குன்னூருக்கு குடும்பத்துடன் மலை ரயிலில் பயணம் செய்தார். இந்நிலையில், குன்னூர் ரயில் நிலையத்தில் பொறியியல் பிரிவில் பணிபுரியும் 6 பேருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவர்கள் அனைவரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  ரயில்வே பணிமனையில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால்  ரயில்வே ஊழியர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கவர்னர் மலை ரயிலில் குடும்பத்துடன் பயணித்த அடுத்த நாளே 6 ஊழியர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: