ஆலங்காயத்தில் சாராய வழக்கில் கைதானவர் சிறையில் இருந்தே வார்டு உறுப்பினர் தேர்தலில் வெற்றி: பதவியேற்க அனுமதி கோரி கலெக்டரிடம் மனைவி மனு

திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியம் வளையாம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட இந்திராநகரை சேர்ந்தவர் கிருஷ்ணன்(37). இவரது தந்தை சிவலிங்கம் பல வருடங்களுக்கு முன்பு அதே பகுதியில் சாராய வியாபாரம் செய்துள்ளார். அவர் இறந்த பிறகு கிருஷ்ணன் சாராய வியாபாரம் செய்வதாகக் கூறி போலீசார் அடிக்கடி வழக்குப்பதிந்து சிறையில் அடைத்துள்ளனர். இந்நிலையில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் வளையாம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் 9வது வார்டு உறுப்பினருக்கு கிருஷ்ணன் சீப்பு சின்னத்தில் நின்று வாக்கு சேகரித்து வந்தார். தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு திடீரென கிருஷ்ணனை சாராய வழக்கில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

வாக்கு எண்ணிக்கை நடந்தபோது, பதிவான 372 வாக்குகளில் 194 வாக்குகள் பெற்று கிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். 20ம் தேதி (இன்று) பதவியேற்பு நடக்கவுள்ள நிலையில், கிருஷ்ணன் சிறையிலேயே உள்ளார். இந்நிலையில் அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் பெரியப்பா சதாசிவம் ஆகியோர் கலெக்டர் அமர்குஷ்வாஹாவிடம் நேற்று முன்தினம் மனு அளித்தனர். அதில், ‘‘கிருஷ்ணன் மீது போட்ட வழக்கு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுத்து, வெற்றி பெற்ற வார்டு உறுப்பினராக பதவியை ஏற்க அனுமதிக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: