இலங்கை கடற்படை அட்டூழியம்: ரோந்து கப்பலால் மோதி விசைப்படகு மூழ்கடிப்பு

* கடலில் மாயமான மீனவர் சடலமாக மீட்பு

* தத்தளித்த 2 பேர் சிறைப்பிடிப்பு

* கோட்டைப்பட்டினத்தில் மீனவர்கள் மறியல்

அறந்தாங்கி: புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து 118 விசைப்படகுகளில் 450க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்றுமுன்தினம் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இதில் ஒரு விசைப்படகில் ராஜ் மகன் ராஜ்கிரண் (30), சுதாகர் மகன் சுகந்தன் (23), ரெட்டையாளத்தை சேர்ந்த அருளானந்தன் மகன் சேவியர் (32) ஆகிய 3 பேர் சென்றனர். அன்று இரவு நெடுந்தீவு அருகே படகை நிறுத்தி மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இலங்கை கடற்படையினரின் ரோந்து கப்பல், அதிக ஒலி எழுப்பியபடி ராஜ்கிரண், சுகந்தன், சேவியர் ஆகியோர் இருந்த விசைப்படகு மீது பயங்கரமாக மோதியது.

அதிர்ச்சி அடைந்த 3 மீனவர்களும் உயிர்பிழைப்பதற்காக கடலில் குதித்தனர். இதையடுத்து விசைப்படகு உடைந்து கடலில் மூழ்கியது. கடலில் தத்தளித்த சுகந்தன், சேவியர் ஆகிய 2 மீனவர்களை இலங்கை கடற்படையினர்  மீட்டு தங்கள் கப்பலில் ஏற்றினர். ராஜ்கிரணை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து 2 மீனவர்களையும் கைது செய்து காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்றனர். விசைப்படகை இலங்கை கடற்படையினரின் கப்பல் மோதி மூழ்கடித்ததை பார்த்த, அருகில் மீன்பிடித்து கொண்டிருந்த கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த விசைப்படகு மீனவர்கள் அங்கிருந்து புறப்பட்டு கரை திரும்பி, மீனவர் சங்கப்பிரதிநிதிகளிடம் புகார் கூறினர்.

அவர்கள் உடனடியாக மீன்வளத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதை தொடர்ந்து மீனவர் சங்கத்தினர், இலங்கை கடற்படையினரை கண்டித்தும், மாயமான மீனவர் ராஜ்கிரனை மீட்க வலியுறுத்தியும் கிழக்கு கடற்கரை சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் மீனவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதை தொடர்ந்து கோட்டைப்பட்டினம் மீனவர்கள் 10 பேர், மீன்வளத்துறை அனுமதியுடன் 2 விசைப்படகுகளில், மாயமான மீனவரை தேடி கடலுக்கு சென்றனர்.

இதனிடையே கடலுக்குள் மாயமான மீனவர் ராஜ்கிரண் நீரில் மூழ்கி உயிரிழந்துவிட்டதாகவும், பல மணி நேரத்துக்கு பிறகு அவரது சடலத்தை கைப்பற்றி, காங்கேசன் துறைமுகத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் இலங்கை கடற்படையினர் ஒன்றிய அரசுக்கு தகவல் அளித்தனர். இதை அறிந்ததும் தேடுதல் வேட்டைக்கு சென்ற மீனவர்கள் உடனடியாக கரை திரும்பினர். இந்த சம்பவம் கோட்டைபட்டினத்தில் பெரும் பரபரப்பையும், மீனவர்கள் மத்தியில் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

கைதான மீனவர்களை மீட்க கோரிக்கை

இதுகுறித்து மீனவர்கள் கூறுகையில், தமிழக மீனவர்களை தொடர்ந்து தாக்கும் இலங்கை கடற்படையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும. இலங்கை கடற்படையினர் விசைப்படகை மூழ்கடித்ததால் உயிரிழந்த மீனவர் ராஜ்கிரன் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்கள் சுகந்தன், சேவியர் ஆகியோரை உடனே விடுதலை செய்ய ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

9 மாதத்தில் 5 மீனவர்கள் ெகாலை

புதுக்கோட்டை,  ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, காரைக்கால் பகுதி மீனவர்கள்  இந்திய கடற்பகுதியில் கூட நிம்மதியாக மீன்பிடிக்கவிடாமல் இலங்கை  கடற்படையினர் தொடர்ந்து அட்டூழியம் செய்து வருகின்றனர். கடந்த ஜனவரி 18ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், தங்கச்சிமடத்தை சேர்ந்த மெசியா, நாகராஜ்,  செந்தில்குமார், சாம்சன்டார்வின் ஆகிய 4 மீனவர்கள் சென்ற விசைப்படகை இலங்கை  கடற்படையினர் ரோந்து கப்பலால் மோதி, கடலில் மூழ்கடித்தனர். 4 மீனவர்களையும் சித்ரவதை செய்து கடலில் மூழ்கடித்து படுகொலை  செய்தனர். அதேபோல, தற்போது மீனவர் ராஜ்கிரனையும் கொன்று விட்டனர். அவரது சாவிற்கு இலங்கை கடற்படையினர்தான் காரணம் என  மீனவர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

மீனவர் உடலை கொண்டுவர நடவடிக்கை

தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று மாலை மீனவர் ராஜ்கிரண் வீட்டிற்கு சென்று, அவரது குடும்பத்திற்கு ரூ.1 லட்சம், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட சுகந்தன், சேவியர் ஆகிய 2 மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதி வழங்கி ஆறுதல் கூறினார். பின்னர் அவர் கூறுகையில், இலங்கையில் உள்ள மீனவர் ராஜ்கிரண் சடலத்தை விரைவாக கோட்டைப்பட்டினம் கொண்டு வரவும், இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள சுகந்தன், சேவியர் ஆகிய 2 மீனவர்களை மீட்டு கொண்டுவரவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுத்துள்ளார் என தெரிவித்தார்.

Related Stories: