9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற 27,000 பேர் இன்று பதவி ஏற்பு: தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கு 22ம் தேதி மறைமுக தேர்தல்

சென்னை: தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சி மற்றும் தற்செயல்  தேர்தல், என மொத்தம் 27,792 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களில் 3221 பதவிக்கும், கிராம ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் 137 இடம், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் 2 பதவியிடம், மாவட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினரில் 2 பதவியிடங்களுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

வேட்புமனு தாக்கல் செய்யாதது மற்றும் தேர்தல் நிறுத்தி வைப்பு என ஒரு கிராம ஊராட்சி தலைவர் பதவியிடம், ஒரு ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடம், 5 கிராம ஊராட்சி தலைவர் பதவியிடம், 26 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடத்திற்கு வாக்குப்பதிவு நடைபெறவில்லை. மீதமுள்ள 151 மாவட்ட ஊராட்சி உறுப்பினர், 1415 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், 2865 கிராம ஊராட்சி தலைவர், 19,964 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கு கடந்த 6ம் தேதி, 9ம் தேதி என இரண்டு கட்டமாக வாக்குப்பதிவு நடந்தது.

இந்த தேர்தலில், திமுக பிரமாண்ட வெற்றி பெற்றது. மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினரில் (153 பதவி) திமுக 139 இடங்களிலும், காங்கிரஸ் 9, அதிமுக 2 இடம், மற்றவை 3 பேர் வெற்றி பெற்றன. ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியில் (1421 இடங்கள்) திமுக 983 பேர், அதிமுக 212 பேர், காங்கிரஸ் 33 பேர், பாஜ 8 பேர், சிபிஎம் 4, சிபிஐ 3, மற்றவை 177 பேர் வெற்றி பெற்றுள்ளனர். ஒரு இடத்திற்கு தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளது. கிராம ஊராட்சி தலைவர் பதவியில் 3007 இடங்களில் 3002 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது.

5 இடங்களில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் 23211 பதவிகள். 23,185 இடங்களில் தேர்தல் நடந்தது. 26 இடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தலில் வெற்றி பெற்ற மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களின் முதல் கூட்டம் மற்றும் பதவியேற்பு விழா இன்று நடக்கிறது. நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தேர்தல் நடந்து உறுப்பினர்கள் பதவியேற்க உள்ளதால் பதவியேற்பு விழாவுக்கு  ஏற்பாடுகள் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் சார்பில் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அலுவலகம் அனைத்தும் வர்ணம் பூசப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் 11 பேர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் 98 பேர், ஊராட்சி தலைவர்கள் 274 பேர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 1938 பேர் இன்று பதவியேற்கிறார்கள். செங்கல்பட்டு மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 16 பேர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் 154 பேர், ஊராட்சி தலைவர் 359 பேர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 2679 பேர் இன்று பதவியேற்கிறார்கள்.

மொத்தம் உள்ள 27,792 இடங்களில் 32 இடங்களுக்கு தேர்தல் நடைபெறவில்லை. இதனால், இன்றைய தினம் தேர்தல் நடந்த 27,760 இடங்களில் வெற்றி பெற்றவர்கள் பதவியேற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தொடர்ந்து 22ம் தேதி மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவர், கிராம ஊராட்சி துணை தலைவர் ஆகியோரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் நடைபெறுகிறது.இதுதொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிவிப்பு: 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான சாதாரண தேர்தல், 28 மாவட்டங்களில் நிரப்பப்படாத மற்றும் காலியிடம் ஏற்பட்ட பதவியிடங்களுக்கு தற்செயல் தேர்தல் நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவியிடங்களுக்கு போட்டியின்றி மற்றும் போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 20ம் தேதி (இன்றும்) காலை 10 மணிக்கு தொடர்புடைய தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் முன்னிலையில் அந்தந்த மாவட்ட ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் கிராம ஊராட்சி அலுவலகத்தில் பதவி பிரமாணம் எடுத்துக்கொள்ள நாள் மற்றும் நேரம் நிர்ணயம் செய்துள்ளது.

எனவே, தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் அனைவரும் இன்று காலை 10 மணிக்கு அந்தந்த ஊராட்சி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு பதவி எடுத்துக்கொண்டவர்கள் மட்டுமே 22ம் தேதி நடைபெறவுள்ள மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர், துணைத் தலைவர், கிராம ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடவோ அல்லது பங்களிக்கவோ அல்லது வாக்களிக்கவோ தகுதியுடையவர் ஆவார் என்று தெரிவிக்கப்படுகிறது.

* கிராம ஊராட்சி தலைவர் பதவியில் 3007 இடங்களில் 3002 பதவிகளுக்கு தேர்தல் நடந்தது. 5 இடங்களில் தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

* கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் 23,211 பதவிகள். 23,185 இடங்களில் தேர்தல் நடந்தது. 26 இடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

* தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் இன்று காலை 10 மணிக்கு அந்தந்த ஊராட்சி அலுவலகத்தில் பதவிப்பிரமாணம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

* பதவி ஏற்றுக்கொண்டவர்கள் மட்டுமே 22ம் தேதி நடைபெற உள்ள மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், துணை தலைவர், கிராம ஊராட்சி துணை தலைவர் தேர்தலில் போட்டியிடவோ, வாக்களிக்கவோ தகுதியுடையவர்.

Related Stories: