பிஇ, பிடெக், முதலாண்டு வகுப்பு நவ.1ல் தொடங்கும்: அண்ணா பல்கலை. துணை வேந்தர் தகவல்

சென்னை: அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் வேல்ராஜ் கூறியதாவது: பிஇ, பிடெக் பட்டப் படிப்புகளில், இந்த  ஆண்டு மாணவர்களை சேர்ப்பதற்கான கவுன்சலிங்கில் அரசுப் பள்ளி மாணவர்கள், சிறப்பு பிரிவு  மாணவர்களுக்கும் செப்டம்பர் 15ம் தேதி முதல் 24ம் தேதி வரையும், தொழில் பிரிவு மாணவர்களுக்கு செப்டம்பர் 27ம் தேதி முதல் அக்டோபர் 5ம் தேதி வரையும், பொதுப்பிரிவுக்கு செப்டம்பர் 27ம் தேதி முதல் அக்டோபர் 17ம் தேதி வரையும் 4 சுற்றுகளாக கவுன்சலிங் நடந்து முடிந்துள்ளது.

இந்த கவுன்சலிங்கில் இட ஒதுக்கீடு பெற்ற மாணவர்கள் 25ம் தேதி முதல் 27ம் தேதி வரை கல்லூரிகளில் சேர்க்கப்படுவார்கள். சேர்க்கை வழங்கப்படும் நாளில் விடுதிகளிலும் தங்க வைக்கப்படுவார்கள். இதையடுத்து, நவம்பர் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை பொறியியல் படிப்புகள் குறித்தும், மாணவர்களுடன் பழகுதல், கற்றல் செயல்பாடுகள், கல்லூரிகளில் உள்ள ஒவ்வொரு  துறை, பிரிவுகள் குறித்தும் விளக்குதல், மாணவர்களின் திறன்களை கண்டறிதல், போன்றவை மாணவர்களுக்கு நேரடியாக நடத்தப்படும்.

அதற்கு பிறகு, 15ம் தேதிக்கு பிறகு ஆன்லைன் முறையில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படும். கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு ஏற்கெனவே விடுதிகளில் தங்கியுள்ள 4ம் ஆண்டு மாணவர்கள் படிப்பு முடித்து வெளியில் சென்றபிறகு, முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கும். மார்ச் 1ம் தேதி வரை முதல் ஆண்டு மாணவர்களுக்கு முதல் பருவத்துக்கான வகுப்புகள் நடத்தப்படும். மார்ச் 7ம் தேதி முதல் பருவத் தேர்வுகள் தொடங்கும்.

அடுத்த இரண்டாவது பருவத்துக்கான வகுப்புகள் ஏப்ரல் 4ம் தேதி தொடங்கும். மேலும், அண்ணா பல்கலைக் கழகத்தில் இணைப்பு பெற்றுள்ள பொறியியல் கல்லூரிகளில் 1ம் தேதி முதல் வகுப்புகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் மாணவர்கள் சேர்க்கைக்கு கல்லூரிகள் காலக்கெடு கோரினால், 8ம் தேதி முதல் பருவத்துக்கான வகுப்புகள் தொடங்கும். கல்லூரிகளில் உள்ள இட வசதிக்கு ஏற்ப நேரடி வகுப்புகள் நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும்.

Related Stories: