கடலூரில் மதுவுக்கு அடிமையானதால் கொடூரம்; ஓய்வு பெற்ற துணை கலெக்டரை அடித்துக்கொன்ற சைக்கோ மகன்: பீர் பாட்டில்களுக்கு நடுவேதான் படுக்கை

கடலூர்: கடலூர் ஆணைக்குப்பம், காமாட்சி நகர் பகுதியில் வசித்து வந்தவர் சுப்பிரமணியன் (75). துணை கலெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி சரஸ்வதி, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களுக்கு 2 மகள்கள், 2 மகன்கள். ஒரு மகள் வெளிநாட்டிலும், மற்றொருவர் பெங்களூரிலும் வசிக்கிறார்கள். மகன்கள் இருவரும் இரட்டையர்கள். மூத்த மகன் சென்னையில் வசிக்கிறார். இளைய மகன் கார்த்திக் (38), தந்தையுடன் கடலூரில் வசித்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் சுப்பிரமணியன் ரத்த காயங்களுடன் வீட்டில் இறந்து கிடப்பதாக புதுநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது மகன் கார்த்திக்கை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். இதில் அவரே தனது தந்தையை அடித்துக்கொன்றது தெரியவந்தது. இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: பொறியியல் பட்டதாரியான கார்த்திக், சென்னையில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார்.

பணியிடத்தில் இவரது நடவடிக்கையில் மாறுதல் தெரியவே அங்கிருந்து சில ஆண்டுகளுக்கு முன்பு அனுப்பிவிட்டனர். பின்னர் அவர் கடலூரில் உள்ள தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். தாய் இறந்ததில் இருந்தே கார்த்திக் லேசாக மனநல பாதிப்புக்கு ஆளாகியுள்ளார். பின்னர் அது அதிகமானதாக கூறப்படுகிறது. இதனால்தான் அவர் வேலையில் கவனம் செலுத்த முடியாமல் இருந்துள்ளார். கடலூருக்கு வந்தபின்பு தினமும் தந்தையிடம் தகராறு செய்து பணத்தை பிடுங்கி மதுவகைகளை வாங்கி அருந்துவது, சிகரெட் பிடிப்பது என இருந்துள்ளார்.

அதிலும் குறிப்பாக பீர்பாட்டில்கள் என்றால் அவருக்கு மிகவும் இஷ்டம். இதனால் அவர் மேல்மாடியில் உள்ள தனது அறையில் நூற்றுக்கணக்கான காலி பீர்பாட்டில்களை அடுக்கி வைத்து அதன் நடுவேதான் படுக்கவே செய்வார். கீழ் தளத்தில் தந்தை சுப்பிரமணியன் இருப்பார். அவருக்கு உடல்நல பாதிப்பு இருந்ததால் மேல்தளத்திற்கு செல்ல மாட்டார். இதனால் மேல்தளத்தில் என்ன நடக்கிறது என்று கூட தெரிந்துகொள்ளாமல் இருந்துள்ளார். கீழ்தளத்தில், வீட்டுக்கு வெளியில் இருக்கும்போதெல்லாம் கார்த்திக் நல்ல பிள்ளைதான்.

மேல்தளத்திற்கு சென்றுவிட்டால் தனது சைக்கோ குணத்தை வெளிப்படுத்துவாராம். பாட்டி ஒருவர் வந்து சமைத்து கொடுத்துவிட்டு செல்வார். இதை தந்தை, மகன் இருவரும் சாப்பிடுவார்கள். பாட்டி வராத பல நாட்களில் ஓட்டல் சாப்பாடுதான். ஓட்டலுக்கு செல்லும்போது, மது வாங்க செல்லும்போதெல்லாம் அவர் நல்ல முறையில்தான் இருப்பார். தனது அறைக்கு வந்து பீரை அருந்துவார். அந்த பாட்டில்களை வெளியே வீச மாட்டார். இதனால் படுக்கையை சுற்றி பீர்பாட்டில்கள் சூழ்ந்திருக்கும்.

தனது கம்ப்யூட்டர் வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு சிறு ஒற்றையடிப்பாதை விட்டிருக்கிறார். இதை தவிர்த்து எல்லா இடங்களிலும் பீர் பாட்டில் மயம்தான். பீர் போதை போதாமல் தூக்க மாத்திரைகளையும் அதிகளவில் வாங்கி போட்டுக்கொள்வார். இதனால் அவர் அந்த அறையில் எப்போதும் தன்னை மறந்த நிலையில்தான் இருப்பார். சாப்பாடு வாங்கி வந்த பார்சல் பேப்பர்களையும் வெளியில் வீசுவதில்லை. அவை ஒரு குப்பைமேடு போல அறையில் சூழ்ந்திருக்கிறது. நூலாம்படைகளுக்கு மத்தியில்தான் அவர் நடமாட்டமே.

இவ்வாறு அவர் உலகம் ஒரு தனி உலகமாக இருந்த நிலையில், நேற்று முன்தினம் காலையில் மதுவுக்காக தந்தை சுப்பிரமணியனிடம் பணம் கேட்டபோது அவர் தர மறுக்கவே தகராறு முற்றியது. இதில் கோபம் அடைந்த சுப்பிரமணியன் கார்த்திக்கை அடித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் அருகில் கிடந்த இரும்பு ராடை எடுத்து தந்தையின் தோள்பட்டை, தொடை மற்றும் மண்டையில் தாக்கியுள்ளார்.

இதில் அவர் மயங்கி விழவே தனது அறைக்கு சென்றுவிட்டார் கார்த்திக். போதை தெளிந்து அவர் வந்து பார்த்தபோது, தந்தை எழுந்திருக்காமல் கிடந்ததால் வெளியில் வந்து தனது தந்தை மயங்கி கிடப்பதாக கூறியுள்ளார். இதை தொடர்ந்து போலீசார் வந்து பார்த்தபோது சுப்பிரமணியன் ரத்த வெள்ளத்தில் இறந்தது தெரிய வந்துள்ளது.  இதையடுத்து கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தந்தை சடலம் அருகில் நின்று சாப்பிட்ட மகன்

கொலை சம்பவத்தை அறிந்த நிலையில் போலீசார் விசாரணைக்காக அங்கு சென்றனர். அப்போது வீட்டின் ஒரு ஓரத்தில் மகன் கார்த்திக் நின்று, தந்தையை கொலை செய்துவிட்டதைக்கூட உணராமல் சார் நான் கொஞ்சம் சாப்பிடலாமா என போலீசாரிடம் கேட்டு தனது உணவை எடுத்துவந்து தந்தையின் சடலத்துக்கு அருகிலேயே சாப்பிட்டுள்ளார். இதை பார்த்த போலீசார் மற்றும் அக்கம்பக்கத்தினர் மகனின் பாசமற்ற நிலையைக் கண்டு திகைத்தனர்.

அண்ணனை பார்த்து கதறி அழுதார்

சுப்பிரமணியன் இறந்த தகவல் கேட்டு சென்னையில் உள்ள அவரது மூத்த மகன் கடலூருக்கு வந்துள்ளார். அவரை பார்த்த கார்த்திக், அவரை கட்டிப்பிடித்து அழுதுள்ளார். தான் தவறு செய்துவிட்டதாகவும், மன்னிக்கும்படியும் கூறியுள்ளார்.

காதல்தான் காரணம்

கார்த்திக் தனது தாயார் மீது பாசமாக இருந்த நிலையில், அவரது இறப்பு மன அழுத்தத்தை கொடுத்திருக்கிறது. இதை தொடர்ந்து அவர் ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அது தோல்வியில் முடிந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் மனசிதைவுக்கு ஆளாகி போதைப்பொருட்களுக்கு அடிமையானதாக கூறப்படுகிறது.

Related Stories: