கழிவுநீர் குழாயை அடைத்த தகராறு; தம்பதி தீக்குளித்து தற்கொலை: உறவுக்கார பெண் கைது

அம்பத்தூர்: அம்பத்தூர், சோழபுரம், சரஸ்வதி பாண்டுரங்கன் தெருவை சேர்ந்தவர் ஜானகிராமன் (85). இவரது மனைவி மாரியம்மாள் (74). இவர்கள், மகன் யுவராஜ், மருமகள் கோமதி மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தனர். ஜானகிராமனின் வீட்டின் எதிரே, உறவினர் சசிகலா (50), தனது வளர்ப்பு மகன் கிரதனுடன் (10) வசித்து வருகிறார். இவரது கணவர் சண்முகம் காலமாகிவிட்டார். ஜானகிராமன் மற்றும் சசிகலா இடையே சொத்து தகராறு இருந்து வந்துள்ளது. இதன்காரணமாக, ஜானகிராமன் வீட்டுக்கு செல்லும் கழிவுநீர் குழாய் இணைப்பை சசிகலா சமீபத்தில் அடைத்ததாக கூறப்படுகிறது.

இதனால், கழிவுநீர் வெளியேற முடியாமல் ஜானகிராமன் வீட்டு வளாகத்தில் தேங்கியுள்ளது. இதுதொடர்பாக, கடந்த சில தினங்களாக இரு குடும்பத்தினர் இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று காலை ஜானகிராமன் அவரது மனைவி மாரியம்மாள் ஆகியோர், சசிகலா வீட்டுக்கு பின்புறமிருந்த பயன்படுத்தாத குளியலறையில் தீக்குளித்தனர். இதனை பார்த்த மகன் யுவராஜ் மற்றும் குடும்பத்தினர், தீயை அணைக்க முயன்றனர். ஆனால், அதற்குள் தம்பதி உடல் கருகி உயிரிழந்தனர். தகவலறிந்த அம்பத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, ஜானகிராமன் வீட்டில் எழுதி வைத்திருந்த கடிதம் போலீசாரிடம் கிடைத்தது. அதில், ‘எனது வீட்டு கழிவுநீர் இணைப்பை அடைக்க கூடாது என கூறியும், சசிகலா அடைந்து விட்டார். இதனால், ஏற்பட்ட மன உளைச்சலில் தான் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்கள் சாவுக்கு சசிகலா தான் காரணம். அவருக்கு சரியான தண்டனை வாங்கி கொடுங்கள்,’ என எழுதி இருந்தது. இதையடுத்து போலீசார், தம்பதியை தற்கொலைக்கு தூண்டியதாக சசிகலா மீது வழக்கு பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

Related Stories:

More
>