புத்தகம் விற்று ஊழியர்களின் வயிற்று எரிச்சலை கொட்டிக் கொள்ளும் அதிகாரி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘சேலம் அழகி கொலை விஷயத்தில் புதுசாக ஏதாவது மேட்டர் இருக்கா...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மாங்கனி மாநகரில் ஸ்பா அழகி கொலை மேட்டர், காக்கி அதிகாரிகளை அதிர்ச்சியடைய வச்சிருக்காம். மசாஜ் சென்டருன்னு தொடங்கிட்டு, பலான மேட்டர் அங்க நடந்திருக்கு. இலைக்கட்சி ஆட்சியில, சில காக்கி அதிகாரிகள் இதற்கு உடந்தையாக இருந்திருக்காங்க. இறந்துபோன அழகியின் மசாஜ் சென்டர ஓப்பன் பண்ணினதே, கீழ்மட்ட காக்கி அதிகாரி தானாம். இதற்கு பலனா எந்நேரத்தில் அவருக்கு தேவைப்படுதோ, உடனே அந்த ஸ்பாவுக்கு போயிடுவாராம். நீண்ட நேரத்துக்கு பிறகு திரும்புவாராம். அதுவும் போதாதுன்னு தனது அதிகாரத்தை பயன்படுத்தி, 4 ரோடு பக்கமுள்ள லாட்ஜில் ரூம் போட்டிருக்காராம்.  

நான் இருக்கும் வரை உங்களை யாரும் எதுவும் செய்ய முடியாதுன்னு, அழகிக்கு நம்பிக்கை ஊட்டினாராம். இதெல்லாம் அதிகாரிகள் நடத்திய தொடர் விசாரணையில் வெளியே வந்துக்கிட்டிருக்காம். இதையே காரணம் காட்டி, பக்தி மயமான ஏட்டு ஒருவரும், ஸ்பா வாசல்ல பலமணி நேரம் காத்துக்கிடந்து காரியத்த சாதிச்சிக்கிட்டு போவாராம். அதுல, இவர் வேறமாதிரியான ஆளாம். கிணறு தோண்ட பூதம் கிளம்பிய கதையா இந்த மர்டர் கேசு போயிட்டிருக்காம். இதெல்லாம் மாநகர உயர்அதிகாரியின் காதுக்கு போகாம, சில கீழ் அதிகாரிகள் பார்த்துக்குவாங்களாம்.

இந்த கும்பலை அடையாளம் கண்டு கூண்டோடு மாத்தினா தான், வெளியே தலைகாட்ட முடியுமுன்னு நேர்மையான காக்கிகள் குமுறிக்கிட்டு இருக்காங்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘அரசு ஊழியர்களை புத்தக விற்பனையாளராக மாற்றிய அதிகாரியை பற்றி சொல்லுங்கே கேட்போம்... விசித்திரமாக இருக்கு...’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘சிவகங்கை  மாவட்டத்தில் தனியார் டிரஸ்ட் கட்டுப்பாட்டில் பல்வேறு கோயில்கள் உள்ளன. இக்கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்துவது, புனரமைப்பு, உண்டியல் திறப்பு   உள்பட பல்வேறு வேலைகளுக்கு அறநிலையத்துறையில் அனுமதி பெற வேண்டும். இதற்காக அறநிலையத்துறையில் உயர்பதவியில் உள்ள அதிகாரி, தான் எழுதிய ரூ.300 மதிப்புள்ள புத்தகத்தை கும்பாபிஷேகம் என்றால் குறைந்தது 100 புத்தகங்களுக்கு மேல் வாங்க வேண்டும் என வற்புறுத்துகிறாராம்.  

தவிர  ஒவ்வொரு வேலைக்கும் தகுந்தாற்போல் புத்தகத்தின் எண்ணிக்கை மாறுபடும். டீல் முடிந்தால் தான் அனுமதியளிக்கப்படுமாம். சம்திங் வாங்குவதை பணமாக  வாங்கினால் பிரச்னை என்பதால் இந்த நூதன முறையை கையாண்டு வருகிறாராம். இதில், தான் எழுதிய புத்தகத்தை விற்பனை செய்தது போல் ஆகிவிடும். பணமும்  வந்து விடும். தவிர பணியாளர்களையும் விட்டுவைப்பது இல்லையாம் இந்த அதிகாரி.  விடுமுறை தினம் என்றாலும் மீட்டிங் போடுவது என பல்வேறு வகையில் மன  உளைச்சலை ஏற்படுத்தி வருவதாக சக பணியாளர்கள் புலம்பி வர்றாங்க. அப்புறம் ஊழியர்களையும் கோயிலுக்கு வரும் விஐபிகளிடம் புத்தகம் விற்க சொல்லி சேல்ஸ்மேனாக மாற்றுகிறாராம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘காய்கறி கடை முதல் ஜூவல்லரி கடைகளின் படிக்கட்டில் ஏறி, கல்லா கட்டும் வெள்ளை உடை போலீசை பற்றி சொல்லுங்க....’’’ என்றார் பீட்டர் மாமா. கோவை  மாநகரில் பெரியகடைவீதி, ராஜவீதி, தாமஸ் வீதி, டவுன்ஹால், உக்கடம், போன்ற  பகுதிகளில் இரண்டு வருடத்துக்கு மேலாக ஒரு எஸ்.ஐ., பணிபுரிந்து வருகிறார்.  இவர், முன்னாள் அமெரிக்க அதிபரின் பெயர் கொண்டவர். இவருக்கு உதவியாக  ஆசையானவர் ஒருவர் உள்ளார். இருவரும் வசூலில் படு கில்லியாக உள்ளனர்.  யாருக்கும் பயப்படுவதில்லை. இருசக்கர வாகன ஓட்டுனர்களை இடைமறித்து,  லைசென்ஸ், ஆர்.சி.புத்தகம், இன்சூரன்ஸ், மொபைல் பேச்சு, மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டுதல் என ஏதாவது ஒரு குற்றத்தை குறிப்பிட்டு, வசூல் தட்டி  எடுத்துவிடுகின்றனர்.

மேலும், இவர்களது எல்லைக்குள் உள்ள 200-க்கும்  மேற்பட்ட கடைகளில் தினந்தோறும் வசூல் எடுக்கிறார்கள். மளிகை கடை, காய்கறி  கடை என எதையும் விடுவதில்லை. சரக்கு லாரிகளும் தப்ப முடியாது. தற்போது,  தீபாவளி ஷாப்பிங் கூட்ட நெரிசல் அதிகமாகிறது. ஆனாலும், இவர்கள் அதுபற்றி  கண்டுகொள்வதில்லை. கரன்சி ஒன்றே இவர்களது குறியாக உள்ளது. இதனால நேர்மையான போலீசாருக்கு கெட்ட பெயர் என்று அதே ஸ்டேஷனில் வேலை ெசய்பவர்கள் புலம்புகிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.‘‘கில்லி அமைச்சரால் உள்ளாட்சி தேர்தலில் அனைத்து பதவிகளையும் இலை கட்சி இழந்ததாமே, அப்டியா...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘முத்து  மாவட்டத்தின் தென் பகுதியைச் சேர்ந்த அமைச்சர் செயலில் வல்லவராம். கடந்த  சட்டசபை தேர்தலின்போது தனது எல்லைக்கு உட்பட்ட அனைத்து தொகுதிகளையும்  வியூகம் வைத்து வென்று காட்டினாராம். தனது அரசியல் வியூகத்தால் அவருக்கு  அமைச்சர் பதவியும் கிடைத்ததாம். இதனால் தான் அவரை கடந்த உள்ளாட்சி  தேர்தலில் தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், தென்காசி சட்டமன்ற  தொகுதிகளுக்கு பொறுப்பாளராக நியமித்தார்களாம். அந்த ஏரியாவுக்கு உட்பட்ட 5  ஒன்றியங்களில் 69 ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் 6 மாவட்ட ஊராட்சி மன்ற  உறுப்பினர்கள் பதவிக்கான தேர்தலில் வளைய வந்து தேர்தல் பணியாற்றினாராம்.  

பொறுப்பாளராக அறிவித்தது முதல் அவரது கட்சி மாவட்டம் சார்ந்த  நிர்வாகிகளையும் அழைத்துச் சென்று குற்றாலத்தில் தங்கியிருந்து தேர்தல்  பணியை தீவிரமாக கவனித்தாராம். இதில் 6 மாவட்ட ஊராட்சிகளையும், 58 ஒன்றிய  கவுன்சிலர் பதவியையும் கட்சி கைப்பற்றியது. முதல்வரின் வழி நின்று  அண்ணாச்சி சூப்பராக வியூகம் வகுத்து சாதித்துள்ளார் என்று தொண்டர்கள் புகழ்ந்து தள்ளுகிறார்களாம்...’’ என்றார் விக்கியானந்தா.

Related Stories:

More
>