காஷ்மீர் காட்டுப்பகுதியில் 9வது நாளாக தேடுதல் வேட்டை: 6 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

* பொதுமக்கள் வீடுகளிலேயே இருக்க உத்தரவு

ஜம்மு: காஷ்மீரின் ரஜோரி-பூஞ்ச் மாவட்ட எல்லையில் உள்ள காட்டுப்பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே 9வது நாளாக நேற்றும் துப்பாக்கி சண்டை நீடித்தது. இதுவரை 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். எல்லையோர கிராமமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். காஷ்மீரின் ரஜோரி, பூஞ்ச் மாவட்ட எல்லைகள் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவது கடந்த ஜூன் மாதம் முதல் அதிகரித்து வருகிறது.

இதுவரை அப்பகுதியில் நடந்த வெவ்வேறு சம்பவங்களில் 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், இரு மாவட்ட எல்லைகளுக்கு இடைப்பட்ட காட்டுப் பகுதி வழியாக பாகிஸ்தானில் இருந்து லஷ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் 10 பேர் ஊடுருவி இருப்பதாக உளவுத்தகவல்கள் கிடைத்தன. இதன் அடிப்படையில் காட்டுப்பகுதி முழுமையாக ராணுவம் சுற்றி வளைத்துள்ளது. கடந்த 11ம் தேதி பூஞ்ச் மாவட்டம் சுரன்கோட் காட்டுப்பகுதியில் நடந்த தேடுதல் வேட்டையின்போது, ராணுவ அதிகாரி ஒருவர் உட்பட 5 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர்.

இதே போல, மென்தார் பகுதியின் நர்காஸ் காட்டுப்பகுதியில் நடந்த தேடுதல் பணியின் போது, மேலும் 4 வீரர்கள் பலியாகினர். மிகுந்த அடர்த்தியான மரங்கள் கொண்ட காட்டுப்பகுதி என்பதாலும், எல்லையோர கிராமமக்கள் சிலர் தீவிரவாதிகளுக்கு உதவுவதாலும் இந்த தேடுதல் வேட்டையில் சிக்கல் நிலவி வருகிறது. இந்த காட்டுப்பகுதியில் 9வது நாளாக நேற்றும் பாதுகாப்பு படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கி சண்டை தொடர்ந்தது. இதுவரை 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் 4 பேரை பாதுகாப்பு வீரர்கள் தேடி வருகின்றனர். இதற்கிடையே, மென்தார் பகுதியை ஒட்டி தீவிரவாதிகள் காட்டில் பதுங்கியிருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அப்பகுதி மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும், கால்நடைகளை மேய்ச்சலுக்காக காட்டுப்பகுதியில் அழைத்துச் செல்ல வேண்டாம் எனவும் பாதுகாப்பு படையினர் எச்சரித்துள்ளனர்.

Related Stories: