ரயில் நிலையங்கள் மேம்பாட்டு வாரியத்தின் கதை முடிந்தது: ரயில்வே வாரியம் அறிவிப்பு

புதுடெல்லி: ரயில்வே துறையில் மேற்கொள்ளப்படும் சீர்த்திருத்த நடவடிக்கைகளில் ஒன்றாக, ரயில் நிலையங்கள் மேம்பாட்டு கழகம் (ஐஆர்எஸ்டிசி) மூடப்படுவதாக ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது. நாட்டின் பெரு நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களை உலகத்தரத்திற்கு மாற்ற இந்திய ரயில் நிலையங்கள் மேம்பாட்டு கழகம் (ஐஆர்எஸ்டிசி) கடந்த 2012ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த அமைப்பு தென் இந்தியாவில் மட்டுமே 100 ரயில் நிலையங்களில் வசதிகளை மேம்படுத்தும் திட்டத்தை தொடங்க இருப்பதாக அறிவித்தது. மேலும், மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தின் மறுமேம்பாட்டு பணி உள்ளிட்ட பல்வேறு முக்கிய ரயில் நிலைய வளர்ச்சிப் பணிக்காக தனியார் நிறுவனங்களிடம் ஏலம் கோரியுள்ளது.

இந்நிலையில், பல்வேறு அமைச்சகங்களின் கீழ் செயல்படும் பலதரப்பட்ட அமைப்புகளை ஒன்றோடு ஒன்று இணைக்க வேண்டும் அல்லது மூட வேண்டும் என ஒன்றிய நிதி அமைச்சகம் பரிந்துரை செய்தது. இந்த சீர்த்திருத்த நடவடிக்கையின்படி, தற்போது ஐஆர்எஸ்டிசி மூடப்படுவதாக ரயில்வே வாரியம் நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், ஐஆர்எஸ்டிசி.யால் நிர்வகிக்கப்படும் ரயில் நிலையங்களும், திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களும்  அந்தந்த மண்டல ரயில்வேயிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ஐஆர்சிடிசி சந்தை மூலதனம் ரூ1 லட்சம் கோடி சாதனை

பங்கு சந்தையில் சந்தை மூலதனம் ரூ.1 லட்சம் கோடியை எட்டும் 9வது பொதுத்துறை நிறுவனம் என்ற சாதனையை ஐஆர்சிடிசி எனும், ‘ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகம்’ படைத்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு அக்டோபரில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட ஐஆர்சிடிசி நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.1 லட்சத்து 612 கோடியாக இருப்பதாக மும்பை பங்குச்சந்தை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன், ஸ்டேட் வங்கி, கோல் இந்தியா, என்எம்டிசி லிமிடெட், இந்திய ஆயில் கார்ப்பரேஷன், பவர் கிரிட் கார்ப்பரேஷன், எஸ்பிஐ லைப் இன்சூரன்ஸ், பாரத் பெட்ரோலியம், எஸ்பிஐ கார்டுஸ் ஆகிய பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.1 லட்சம் கோடி மூலதனத்தை எட்டின. ஆரம்பத்தில் ஐஆர்சிடிசியின் ஒரு பங்கு விலை ரூ.320 ஆக இருந்த நிலையில் தற்போது 1,737% அதிகரித்து நேற்றைய புதிய உச்சமாக ரூ.6,332.25 விலையை எட்டியது.

ஒரு மாதத்தில் 2வது மூடல்

நிதி அமைச்சகத்தின் பரிந்துரையை தொடர்ந்து மூடப்படும் 2வது ரயில்வே கழகம் இது. இதற்கு முன் கடந்த செப்டம்பர் 7ம் தேதி மாற்று எரிபொருள் ரயில் கழகம் (ஐஆர்ஓஏஎப்) மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories: