அருணாச்சல பிரதேச எல்லையில் இந்தியா ஆயுதங்கள் குவிப்பு; வா... ஒரு கை பார்க்கலாம்... ரபேல், ஆகாஷ் ஏவுகணையும் தயார்நிலை

ரூபா: அருணாச்சல பிரதேசம் கிழக்கு பிராந்தியத்தில் சீன ராணுவத்தின் நடமாட்டம் அதிகரித்து உள்ளதால் நவீன ஆயுத ஆயுதங்களை இந்திய ராணுவம் குவித்துள்ளது. ரபேல் போர் விமானங்கள், ஆகாஷ் ஏவுகணைகள் போன்றவை தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்தியா - சீனா இடையே 3,438 கிமீ எல்லை உள்ளது. இது, அசல் கட்டுப்பாட்டு கோடு என்று அழைக்கப்படுகிறது. இதில், பல இடங்களில் சீன ராணுவத்தின் அத்துமீறல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. அருணாச்சல பிரதேசத்தை சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு திபெத்துக்கு சொந்தமானது என்றும் அந்நாடு கூறி வருகிறது.

 இந்நிலையில், இந்த மாநிலத்தின் கிழக்கு பகுதிகளில் சீன ராணுவத்தின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. ராணுவ போக்குவரத்துக்கான சாலைகள், முகாம்கள், ராணுவ தளங்கள் போன்றவற்றையும் அமைத்து வருகிறது. இதற்கு பதிலடி தரும் வகையில், இம்மாநில எல்லையில் இந்திய ராணுவம் அதிநவீன ஆயுதங்களை குவித்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் இந்தியா - சீனா இடையே 1,300 கிமீ எல்லை உள்ளது. இதை பாதுகாக்கும் வகையிலும், சீனாவுக்கு சவால் விடும் வகையிலும்  ரபேல் போர் விமானங்கள், ஆகாஷ் ஏவுகணை, பீரங்கிகள், 300 கிமீ வரை சென்று தாக்கும் ஏவுகணைகள் உள்ளிட்டவை தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இருநாட்டு ராணுவமும் இம்மாநில எல்லையில் குவிக்கப்பட்டு இருப்பதால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கிழக்கு ராணுவ கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே கூறுகையில், ‘‘ சீனாவின் சவால்களை சமாளிக்க இந்தியா தயாராக உள்ளது. இந்திய ராணுவத்தில் ஒருங்கிணைந்த படைப்பிரிவு உருவாக்கப்படுகிறது. இதற்கு கொள்கை ரீதியான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதில்,  ராணுவம், பீரங்கிப்படை, வான்படை, தளவாட பிரிவுகள் இடம் பெறும், சீனா, பாகிஸ்தான் எல்லைகளில் ஏற்படும் சவால்களை இந்த ஒருங்கிணைந்த படைப்பிரிவு கையாளும். அருணாச்சல பிரதேசம், கிழக்கு லடாக் எல்லையில் தொடர்ந்து சீனா அத்துமீறல்களில் ஈடுபட்டு வருகிறது. டிரோன், ராணுவத்தின் விமானப்படை பிரிவு, ருத்ரா ஹெலிகாப்டர் மூலம் எல்லை, மலைப் பகுதிகள் கண்காணிக்கப்படுகின்றன,’’ என்றார்.

ராணுவ தளபதி ஆய்வு

கிழக்கு லடாக்கில் சீன ராணுவத்தின் நடவடிக்கை அதிகரித்துள்ள நிலையில், ஜம்முவுக்கு இந்திய ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம்.நரவானே 2 நாள் பயணமாக சென்றுள்ளார். அங்கு, எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் தற்போதைய பாதுகாப்பு நிலவரங்களை பார்வையிட்டார். தீவிரவாதிகள் ஊடுருவல், ராணுவத்தினர் மீதான தாக்குதல்கள் குறித்து கேட்டறிந்தார்.

கிராமத்தை உருவாக்கிய சீனா

அருணாச்சல பிரதேசத்தில் இந்திய எல்லையில் இருந்து 4.5 கிமீ தூரத்தில் உள்ள கபான்சிரி என்ற இடத்தில் 101 வீடுகளை அமைத்து ஒரு கிராமத்தையே சீனா உருவாக்கி உள்ளது. கடந்தாண்டு வரை இப்பகுதி வெட்டவெளியாக இருந்தது. சமீபத்தில் எடுக்கப்பட்ட செயற்கைகோள் புகைப்படத்தில் அப்பகுதியில் வீடுகள் இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: