ஒன்றிய அரசு தகவல்: நிலக்கரி தட்டுப்பாடு நிலைமை சீராகிறது

புதுடெல்லி: நாடு முழுவதும் அனல் மின் நிலையங்களில் நிலவி வந்த நிலக்கரி தட்டுப்பாடு தற்போது படிப்படியாக சீராகி வருவதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 135 அனல் மின் நிலையங்கள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த அனல் மின் நிலையங்களில் முக்கிய எரிபொருளாக நிலக்கரி பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், கடந்த மாதம் கனமழை காரணமாக நிலக்கரி உற்பத்தி சரிந்ததால், அனல்மின் நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டது. இந்நிலையில், தற்போது நிலக்கரி பற்றாக்குறை நிலை படிப்படியாக சீராகி வருவதாக ஒன்றிய அரசின் புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன.

ஒன்றிய மின்சார ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தில், நாடு முழுவதும் 4 நாட்களுக்கும் குறைவான நிலக்கரி கையிருப்பில் வைத்துள்ள அனல் மின் நிலையங்களின் எண்ணிக்கை 58 ஆக குறைந்திருப்பதாக கூறப்பட்டுள்ளது. கடந்த 11ம் தேதி இந்த எண்ணிக்கை 69 ஆக இருந்தது. அடுத்த நாள் தேவைக்கு நிலக்கரி இல்லாத அனல் மின் நிலையங்களின் எண்ணிக்கை 15ல் இருந்து 13 ஆகவும், 2 நாள் நிலக்கரி கையிருப்பில் உள்ளவற்றின் எண்ணிக்கை 20ல் இருந்து 18 ஆகவும், 3 நாள் கையிருப்பு எண்ணிக்கை 21ல் இருந்து 12 ஆகவும் சரிந்துள்ளது. இதனால், கடந்த வாரம் மின்பற்றாக்குறை 6,857 மெகா வாட்டாக இருந்த நிலையில் தற்போது அது 2,060 மெகாவாட்டாக குறைந்துள்ளது.

Related Stories:

More
>