இலங்கையில் இருந்து தனி விமானம் வருகை; புத்தர் புனிதப் பொருளுக்கு அரசு மரியாதை வரவேற்பு

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள குஷிநகருக்கு இலங்கையில் இருந்து கொண்டு வரப்படும் புத்தரின் புனித பொருளுக்கு அரசு மரியாதையோடு வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், குஷிநகரில் புத்தர் மகாபரிநிர்வான் அடைந்த இடத்தை பார்வையிடுவதற்காக வரும் வெளிநாட்டு பயணிகளின் வசதிக்காக சர்வதேச விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். இதனை தொடர்ந்து, முதல் விமானமாக கொழும்புவில் இருந்து இலங்கை பிரதிநிதிகளை கொண்ட குழுவினர் வருகை தரும் விமானம் தரையிறங்குகிறது.

இதில், வாஸ்காடுவா கோயிலின் தற்போதைய மகாநாயக்கா தலைமையிலான 12 புத்த துறவிகளும், 123 இலங்கை பிரதிநிதிகளும் இடம் பெற்றுள்ளனர். இலங்கை புத்த மதத்தின் நான்கு பிரிவுகளான அஸ்கிரியா, அமராபுரா, ராமன்யா, மால்வட்டா ஆகியவற்றின் துணை தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர். மேலும், இலங்கை அரசின் கேபினட் அமைச்சர் நமால் ராஜபக்சே தலைமையிலான 5 அமைச்சர்களும் குஷிநகர் வருகின்றனர். விமானத்தில் கொண்டு வரப்படும் புத்தரின் புனித பொருளுக்கு தனி இருக்கை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில், புத்தரின் எலும்பு, சாம்பல், அவருடைய நகைகள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவுக்கு வரும் முக்கிய நபர்களுக்கு அரசு சார்பில் அளிக்கப்படும் பாரம்பரிய மரியாதையுடன், விமான நிலையத்தில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் புனித பொருளை பெற்றுக் கொள்கிறார்.

Related Stories:

More
>