தமிழகத்தை சேர்ந்த இருவரின் புற்றுநோய் சிகிச்சைக்காக பிரதமர் மோடி நிதி: டி.ஆர்.பாலு எம்பிக்கு பிரதமர் அலுவலகம் பதில் கடிதம்

சென்னை: திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு, காஞ்சிபுரம் மாவட்டம் சேலையூரைச் சேர்ந்த, மரியசாந்தி மற்றும் திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரைச் சேர்ந்த பிஜு விக்டர் ஆகியோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதால், பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து உதவிடுமாறு, கடந்த ஆகஸ்ட் மாதம், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். டி.ஆர்.பாலு வேண்டுகோளை ஏற்று பிரதமர் மோடி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவ சிகிச்சைக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகத்தில் இருந்து டி.ஆர்.பாலுவுக்கு அனுப்பியுள்ள கடிதம்: பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து மரியசாந்தி மற்றும் பிஜு விக்டர் ஆகியோரின் புற்றுநோய் மருத்துவ சிகிச்சைகளுக்காக தலா ரூ.3 லட்சம் சென்னையில் உள்ள மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனைக்கும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கும் வழங்கப்படும். சிகிச்சை முடிந்த பின்னர், உரிய ஆவணங்களின் நகலை, பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆவணங்கள் கிடைத்த பின்னர், உதவித்தொகையானது, உடனடியாக மேற்குறிப்பிட்ட மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: