இந்தி தெரியாததால் வாடிக்கையாளருக்கு பணத்தை திருப்பித்தர சொமோட்டோ மறுப்பு

சென்னை: தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர், எஸ்.எஸ்.எம் நகர் பகுதியை சேர்ந்தவர் விகாஷ்(27). இவர், நேற்று முன்தினம் சொமோட்டோவை ஆன்லைன் மூலம் தொடர்பு கொண்டு, குறிப்பிட்ட ஒரு உணவகத்தில் இருந்து 300 ரூபாய்க்கு சிக்கன் ரைஸ், பெப்பர் சிக்கன் காம்போ ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் அவருக்கு வந்த டெலிவரியில் பெப்பர் சிக்கன் இல்லாமல் சிக்கன் ரைஸ் மட்டுமே இருந்துள்ளது. இதனையடுத்து, அவர் உடனடியாக, சொமோட்டோ கஸ்டமர்கேரை சாட் மூலம் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளார்.

அதற்கு வாடிக்கையாளர் சேவை பிரிவு அதிகாரி,சம்பந்தப்பட்ட ஓட்டலை பலமுறை செல்போனில் தொடர்பு கொண்டு விட்டோம். அவர்களுக்கு இந்தி தெரியவில்லை. நீங்களே பேசிப் பாருங்கள் என்று கூறி விட்டனர். இதையடுத்து ஓட்டலை தொடர்பு கொண்டு கேட்டபோது, இது எங்கள் தவறுதான். ஆனால் சொமோட்டோ கால்சென்டரில் இருந்து பேசுபவர் இந்தியில்தான் பேசுகிறார். எனவே பணத்தை திருப்பித் தர ஓட்டல் சம்மதித்து விட்டதாக நீங்களே தெரிவித்து விடுங்கள் என்று விகாஷிடம் தெரிவித்துள்ளனர். இதை மீண்டும் கால்சென்டருக்கு தெரிவித்த போது ஓட்டலுக்கு கான்பிரன்ஸ் கால் போட்டுள்ளனர்.

அப்போது ஓட்டல் ஊழியர்கள் போனை எடுக்காததால் பணத்தை திருப்பித் தரமுடியாது என்று விகாஷிடம் தெரிவித்து இணைப்பை துண்டித்து விட்டார். இதையடுத்து விகாஷ் சாட் சேவை மூலம் கஸ்டமர் கேரை தொடர்பு கொண்டபோது,  ஒரு இந்தியராக இருந்து கொண்டு தேசிய மொழியான இந்தி தெரியாமல் எப்படி இருக்கிறீர்கள் என  சொமோட்டா வாடிக்கையாளர் சேவை அதிகாரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக விகாஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், ‘‘சொமோட்டோவில் உணவு ஆர்டர் செய்தேன். அதில், நான் ஆர்டர் செய்த உணவு முழுமையாக இல்லாமல் இருந்தது.

இவ்விவகாரம் தொடர்பாக சொமோட்டோ வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டேன். அப்போது அவர்கள் ஒரு இந்தியராக இருந்து கொண்டு இந்தியாவின் தேசிய மொழியான இந்தி தெரியாமல் எப்படி இருக்கிறீர்கள். உங்களுக்கு பணம் திரும்ப கிடைக்காது.’’ என்று கூறியதாக அவர் பதிவிட்டிருந்தார். விகாஷ், வாடிக்கையாளர் சேவை மையத்துடனான தனது விவாதத்தையும் ஸ்கிரீன்ஷாட் எடுத்து அனுப்பியிருந்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும், சமூக வலைதளங்களில் கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில், சொமோட்டோ நிறுவனம், சம்பந்தப்பட்ட ஊழியரை பணி நீக்கம் செய்து இருப்பதாக விளக்கம் அளித்துள்ளது.

சொமோட்டோ நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கை: வணக்கம் தமிழ்நாடு. எங்கள் வாடிக்கையாளர் சேவை முகவரின் நடத்தைக்கு வருந்துகிறோம். வேற்றுமையில் ஒற்றுமை என்ற, நம் தேசத்தின் மாறுபட்ட கலாச்சாரத்தின் மீதான எதிர்கருத்தை வாடிக்கையாளரிடம் காட்டிய ஊழியரை பணி நீக்கம் செய்துள்ளோம்.  இந்த வாடிக்கையாளர் சேவை முகவரின் அறிக்கைகள் மொழி அல்லது சகிப்பு தன்மை குறித்த நிறுவனத்தின் நிலைப்பாட்டைக் குறிக்கவில்லை. ஒரு நிறுவனமாக நாங்கள் முழு பயன்பாட்டிற்காக தமிழ் செயலியை உருவாக்குகிறோம். மேலும் கோவையில் ஒரு உள்ளூர் தமிழர் கால் சென்டர்/சர்வீஸ் சென்டரை உருவாக்கும் பணியில் உள்ளோம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், சொமோட்டோ வின் நிறுவன தலைவர் தீபிந்தர் கோயல் ட்விட்டரில், ஒரு அதிகாரியின் சிறிய பேச்சு தேசிய பிரச்னையாக மாறியுள்ளது. நம் நாட்டில் சகிப்பு தன்மை போய் விட்டதா? இதற்கு யாரை குறை சொல்வது என்று பதிவிட்டுள்ளார்.

* மீண்டும் பணியில் சேர்ந்த ஊழியர்

சொமோட்டோ ஊழியரின் நடவடிக் கைக்கு சமூக வலை தளங்களில் கடும் கண்டனம் எழுந்ததையடுத்து ஊழியரை பணி நீக்கம் செய்ததாக அந்நிறுவனம் அறிவித்திருந்தது. அடுத்த சில மணி நேரங்களில் பணி நீக்கம் செய்த ஊழியரை சொமோட்டோ நிறுவனம் மீண்டும் பணியில் அமர்த்தியுள்ளது.

* நிறுவன பங்குகள் சரிந்தது

டிவிட்டரில் ரிஜக்ட் சொமோட்டோ என்ற ஹேஷ்டேக் டிரெண்டிங் நேற்று ஆகியது. இதன் விளைவாக தேசிய பங்குச்சந்தையில் சொமோட்டோ நிறுவனத்தின் பங்குகள் 3 சதவீதத்துக்கு மேல் சரிந்தன. வர்த்தக நாளின் தொடக்கத்தில் ரூ.144.80 என்று இருந்த சொமோட்டோவின் பங்குகள், வர்த்தக நாளின் முடிவில் ரூ.4.45 ஆக குறைந்து பங்கின் விலை ரூ.139.60 ஆக இருந்தது. இதன் மூலம் 3.09% அளவுக்கு சொமோட்டாவின் பங்கு சரிந்திருக்கிறது.

Related Stories: