அனுமதி மீறி கூடுதலாக கட்டிடங்கள் கட்டியதாக சத்யம் சினிமா தியேட்டருக்கு நோட்டீஸ்: சிஎம்டிஏ உயர் அதிகாரி தகவல்

சென்னை:  சென்னை ராயப்பேட்டை திருவிக சாலையில், மிகவும் பிரபலமான சத்யம் சினிமாஸ் காம்ப்ளக்ஸ் உள்ளது.  இந்த வளாகத்தில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மூன்றாவது மற்றும் நான்காவது தளம் கட்டப்பட்டுள்ளது. இதற்கு, சத்யம் சினிமாஸ் சிஎம்டிஏவிடம் திட்ட அனுமதி சான்றிதழ் பெறவில்லை. அதேநேரத்தில் 3வது மற்றும் நான்காவது தளத்தில் திரையரங்கு திறக்கப்பட்டு பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. பொதுவாக, இதுபோன்ற திரையரங்க கட்டிடங்களில் சிஎம்டிஏவிடம் திட்ட அனுமதி சான்று பெற்றுதான், கட்டுமான பணிகளை தொடங்கியிருக்க வேண்டும்.

அதன்பிறகு, திரையரங்க நிர்வாகம் சார்பில் கட்டிட பணி நிறைவு சான்று பெற்றால் மட்டுமே, பொதுமக்களை அனுமதிக்க வேண்டும். மாறாக, எந்தவித அனுமதியும் இன்றி பொதுமக்களை திரையரங்க நிர்வாகம் அனுமதித்து இருந்ததாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, சிஎம்டிஏவுக்கு கிடைத்த தகவலின் பேரில் திரையரங்க நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியதாக தெரிகிறது. இந்த சூழ்நிலையில் 113 சி சட்டத்தின் கீழ், கட்டிடத்தை வரன்முறை செய்ய திரையரங்க நிர்வாகம் விண்ணப்பித்துள்ளது. இதை தொடர்ந்து சிஎம்டிஏ நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்ட திரையரங்க நிர்வாகத்திடம் நோட்டீஸ் திரும்ப பெற முடிவு செய்தது. இந்த சூழ்நிலையில், சத்யம் சினிமாஸ் மூன்றாவது மற்றும் நான்காவது தளத்துக்கு சீல் வைக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் நேற்று தகவல் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சிஎம்டிஏ உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், சத்யம் சினிமாஸ் திரையரங்க வளாகத்தில் கூடுதலாக கட்டப்பட்ட கட்டிடத்துக்கு முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பது குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்டிருந்தது. சத்யம் சினிமாஸ் முதலில் கட்டிய கட்டிடத்துக்கு அனுமதி வாங்கியுள்ளனர். ஆனால், கூடுதல் கட்டிடம் கட்ட அனுமதி வாங்கவில்லை. ஆர்டிஐயில் நாங்கள் தகவல் கொடுத்த பிறகு, இதுதொடர்பாக முதன்மை தகவல் ஆணையரிடம் இவ்விவகாரம் சென்று விட்டது. அப்போது, தகவல் ஆணையர் நோட்டீஸ் தருமாறு பரிந்துரை செய்தார்.  ஆனால், அதற்கு முன்னதாக திரையரங்க நிர்வாகம் சார்பில் 113 சி சட்டப்படி வரன்முறை செய்ய விண்ணப்பித்துள்ளனர். எனவே, நம்மால் அந்த கட்டிடத்துக்கு சீல் வைக்க முடியாது. அதே நேரத்தில் சிஎம்டிஏ நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது வரன்முறை செய்ய விண்ணப்பித்து இருப்பதால் நோட்டீஸ் திரும்ப பெறப்படுகிறது’ என்றார்.

Related Stories: