கூடலூரில் காங்கிரஸ் குழு நவ.7ம் தேதி நேரில் ஆய்வு: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: கூடலூரில் நீண்ட காலமாக சொத்து மீது நில உரிமை மறுக்கப்படுவது தொடர்பாக, காங்கிரஸ் சார்பில் அமைக்கப்பட்ட குழு நவம்பர் 7ம்தேதி நேரில் ஆய்வு செய்யும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீலகிரி மாவட்டம், கூடலூர் சட்டமன்றத் தொகுதியில், நீண்ட காலமாக அனுபவித்து வருகிற சொத்தின் மீதான நில உரிமை மறுக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக, சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில், தமிழக காங்கிரஸ் சார்பாக குழு அனுப்பப்படுகிறது. இக்குழுவில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் எஸ்.ராஜேஷ்குமார், சட்டமன்ற காங்கிரஸ் கட்சிக் கொறடா எஸ்.விஜயதரணி, சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜே.ஜி.பிரின்ஸ், ஆர்.கணேஷ் ஆகியோர் இடம்பெறுவார்கள். இக்குழுவினர், வரும் நவம்பர் 7ம் தேதி கூடலூர் பகுதிக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: