எல்இடி பல்புகளில் வெண்ணிற ஒளி உமிழி: ஐஐடி மெட்ராஸ் பேராசிரியர்கள் கண்டுபிடிப்பு

சென்னை: எல்இடி பல்புகளில் பயன்படுத்தப்படும் வெண்ணிற ஒளி உமிழியை உருவாக்கி ஐஐடி மெட்ராஸ் பல்கலைக்கழக பேராசிரியர்கள் சாதனை படைத்துள்ளனர். எல்இடி பல்பு மற்றும் அதை சார்ந்து வடிவமைக்கப்பட்டுள்ள பொருட்கள் பலவித வண்ணங்களில் இருக்கிறது. ஆனால், முழுக்க முழுக்க வெண்ணிற ஒளியை வெளிப்படும் எல்இடி பல்பை கண்டுபிடித்து சென்னை ஐஐடி பேராசிரியர்கள் சாதனை படைத்துள்ளனர். மஞ்சள் பாஸ்பருடன் நீல எல்இடியை பூசுவது மற்றும் நீலம், பச்சை மற்றும் சிவப்பு எல்இடிகளை இணைப்பது போன்ற சிறப்பு நுட்பங்கள்படி தான் வெள்ளை ஒளி உருவாக்கப்படுகின்றது.

செயல்திறன் இழப்பை ஏற்படுத்தும், இத்தகைய மறைமுக நுட்பங்களை விட வெண்ணிற ஒளியை நேரடியாக உமிழக்கூடிய பொருட்களுக்கான உலகளாவிய தேடல் உள்ளது. இத்தைகைய சூழலில் நேரடியாக வெண்ணிற ஒளியை உமிழும் தொழில்நுட்பத்தை சென்னை ஐஐடி பேராசிரியர்களின் ஆராய்ச்சி குழு உருவாக்கியுள்ளது. இதற்கு இந்திய அரசின் அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி வாரியத்தின் SERB - தொழில்நுட்ப மொழிபெயர்ப்பு விருது சமீபத்தில்  வழங்கப்பட்டது. இதற்கு காப்புரிமையும் பெறப்பட்டுள்ளது.   இந்த ஆராய்ச்சிக்கு ஐஐடி மெட்ராஸ் வேதியியல் பொறியியல் துறை உதவி பேராசிரியர் அரவிந்த் குமார் சந்திரன் மற்றும் இயற்பியல் துறை பேராசிரியர் ரஞ்சித் குமார் நந்தா பி ஆகியோர் தலைமை தாங்கினர்.

இந்த ஆராய்ச்சியின் நடைமுறை பயன்பாடுகளை விளக்கி பேராசிரியர் அரவிந்த் குமார் சந்திரன் கூறும்போது, ‘பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வரும் அதிக விலை கொண்ட பொருட்களை காட்டிலும், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இத்தகைய பிரகாசமான வெண்ணிற ஒளி உமிழிகள் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும். மேலும், இதனால் ஆற்றலை அற்புதமாக சேமிக்க முடியும். இந்த கண்டுபிடிப்பு என்பது இந்த துறையில் மிகத்தீவிரமான தாக்கத்தை ஏற்படுத்தும். வழக்கமான மற்றும் நன்கு அறியப்பட்ட உமிழிகளுடன் ஒப்பிடும்போது குறைந்தது எட்டு மடங்கு தீவிரமான வெள்ளை ஒளி உமிழ்வை இவை கொடுக்கின்றன. சுற்றுச் சூழலில் தனித்தன்மையோடு விளங்குவதோடு மட்டுமில்லாமல் தீவிர ஒளி மற்றும் ஸ்திரத்தன்மை, நீடித்த உமிழ்வு, ஆற்றல் சேமிப்பு என மிகுந்த பயனுள்ளதாக இவை இருக்கும்’’ என்றார்.

Related Stories: