நன்மங்கலம் அருகே வயல்வெளியில் தண்ணீர் கேன் வியாபாரி கழுத்தறுத்து கொலை: எல்லை பிரச்னை காரணமாக 5 மணி நேரம் சடலத்தை மீட்காமல் போலீசார் அலட்சியம்

வேளச்சேரி: நன்மங்கலம் அருகே வயல்வெளியில் வாலிபர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். நன்மங்கலம் அடுத்த அருள் முருகன் நந்தவனம் நகர் பகுதியில் உள்ள வயல்வெளியில் நேற்று வாலிபர் ஒருவர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர், பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். அதில், சடலமாக கிடந்தது குரோம்பேட்டை ராதா நகரை சேர்ந்த தண்ணீர் கேன் வியாபாரி விக்னேஸ்வரன் (21) என்பதும், இவரை, நேற்று முன்தினம் மதியம் அவரது நண்பர்களான சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்த கமலக்கண்ணன் (21), சரத்  (21) ஆகியோர் இங்கு அழைத்து வந்ததும் தெரிந்தது.  

எனவே, சம்மந்தப்பட்டவர்கள் சிட்லபாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்டவர்கள் எனக்கூறி, சிட்லபாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சிட்லபாக்கம் போலீசார், இது எங்களது எல்லைக்குட்பட்டது இல்லை எனக்கூறினர். ஆனால், பள்ளிக்கரணை போலீசார், ‘உங்கள் எல்லையில் இருந்துதான் விக்னேஸ்வரனை ஆட்டோவில் கடத்தி வந்துள்ளனர். எனவே, நீங்கள்தான், இது தொடர்பாக, வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும்’ என கூறினர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த சிட்லபாக்கம் போலீசார், ‘எங்களிடம், விக்னேஸ்வரன் காணாமல் போனது பற்றி, எந்த புகாரும் இதுவரை வரவில்லை’ என அலட்சியமாக பதில் அளித்தனர். போலீசாரின் எல்லை பிரச்னை காரணமாக, சுமார் 5 மணி நேரம் சடலம் சம்பவ இடத்திலேயே கிடந்தது. இதனையடுத்து, உயரதிகாரிகள் உத்தரவின்பேரில், பள்ளிக்கரணை போலீசார் சடலத்தை மீட்டு, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுதொடர்பாக வழக்குபதிவு செய்து, வியாபாரத்தில் போட்டி காரணமாக விக்னேஸ்வரன் கொலை செய்யப்பட்டாரா அல்லது கள்ளக்காதல் விவகாரமா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

More
>