பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு 25% தீபாவளி போனஸ் ராமதாஸ் வேண்டுகோள்

சென்னை: பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கு, தீபாவளி போனஸ் 25% ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசுக்கு சொந்தமாக 70க்கும் மேற்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் பணியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி நாளைக் கொண்டாடுவதற்காக ஊக்கத்தொகையும், முன்பணமும் வழங்கப்படுவது வழக்கமாகும். தீபாவளிக்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே இவை வழங்கப்பட்டு விடும்.

அவ்வாறு வழங்கினால் தான் தீபாவளி கொண்டாட தேவையான புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கு வசதியாக இருக்கும். ஆனால், நவம்பர் 4ம் நாள் தீபாவளி கொண்டாட இருக்கும் நிலையில், இதுவரை ஊக்கத் தொகை மற்றும் முன்பணம் வழங்கப்படுவதற்கான அறிகுறிகள் கூட எந்தவொரு பொதுத்துறை நிறுவனத்திலும் தென்படவில்லை. நடப்பாண்டிற்கு பொதுத்துறை நிறுவன பணியாளர்களுக்கான ஊக்கத் தொகையை உடனடியாக அறிவிக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனப் பணியாளர்களுக்கு நடப்பாண்டில் தீபாவளி போனஸ் 25% ஆக உயர்த்தி வழங்கவும் அரசு முன்வர வேண்டும்.

Related Stories: