உலக கோப்பை தகுதிச்சுற்று: ஸ்காட்லாந்து தொடர் வெற்றி

அல் அமெரட்: உலக கோப்பை டி20  தகுதிச் சுற்று ஆட்டத்தில்  பப்புவா நியூ கினியாவை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்த ஸ்காட்லாந்து ‘சூப்பர் 12’க்கு முன்னேறும் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளது. டி20 உலக கோப்பை தகுதிச் சுற்று ஆட்டத்தில் நேற்று  பி பிரிவில் உள்ள  ஸ்காட்லாந்து-பப்புவா நியூ கினியா  ஆகிய அணிகள் மோதின. டாஸ் வென்று களத்தில் இறங்கிய ஸ்காட்லாந்து 4வது ஓவரில் 2 விக்கெட்களை இழந்து 26 ரன் எடுத்து   தடுமாற்றத்தில் இருந்தது. ஆனால் அடுத்து ஜோடி சேர்ந்த மாத்யூ கிராஸ் 45,  ரிச்சி பெர்ரிங்டன் 70 ரன் என 3வது விக்கெட்டுக்கு 92ரன் குவித்ததால்  ஸ்கோர் உயர்ந்தது.

மற்றவர்கள் ஒ ற்றை இலக்கத்தில் நடையை கட்டினாலும் 20ஓவர் முடிவில், ஸ்காட்லாந்து 9 விக்கெட்களை இழந்து 165ரன் குவித்தது.   பப்புவா அணியின்   கபுவா மோரியா 4,  சாத் சோபெர் 3 விக்கெட்களை அள்ளினர். தொடர்ந்து 166ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன்  பப்புவா அணி களம் கண்டது. ஸ்காட்லாந்து வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து  பப்புவா அணி  தடுமாறியது. ஒரு கட்டத்தில் அந்த அணி 6 ஓவருக்கு  5 விக்கெட்களை இழந்து 35ரன் மட்டுமே எடுத்திருந்தது.

அதன்பிறகு  அதிரடியாக ஆடிய  நோர்மன் வனுவா 47(37பந்து, 2பவுண்டரி, 2சிக்சர்), சேசே பாவ் 24, கிப்ளின் டோரிகா 18, சாத் சோபெர் 16ரன் குறைந்த பந்துகளில்  விளாசியதால்  ஸ்கோர் உயர்ந்தது. ஆனால் கூடவே விக்கெட்களும் வீழ்ந்ததால் 19.3 ஓவரில்  148 ரன் எடுத்து பப்புவா ஆட்டமிழந்தது.  அதனால்  ஸ்காட்லாந்து 17 ரன் வித்தியாசத்தில் 2வது வெற்றியை பெற்றது. அந்த அணியின் ஜோஷ் டேவே 4 விக்கெட்களை அள்ளினார்.

இந்த வெற்றியின்  மூலம் ‘சூப்பர் - 12’  சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை ஸ்காட்லாந்து தக்க வைத்துக் கொண்டது. கூடவே பப்புவா நியூ கினியா  ‘சூப்பர்-12’க்கு முன்னேறும் வாய்ப்பை ஏறக்குறைய இழந்து விட்டது.

Related Stories:

More
>