தமிழகத்தில் 9 மாவட்டங்களில் 27 ஆயிரம் உள்ளாட்சி பிரதிநிதிகள் நாளை பதவியேற்பு.! 22ம் தேதி மறைமுக தேர்தல்.!

நெல்லை: தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட 27 ஆயிரம் உள்ளாட்சி பிரதிநிதிகள் நாளை 20ம் தேதி பதவியேற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. 22ம் தேதி தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடக்கிறது. தமிழகத்தில் கடந்த 2016ம் ஆண்டு அதிமுக அரசு பதவியேற்ற பிறகு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இதுகுறித்து திமுக வழக்குத் தொடர்ந்ததால் 2019ம் ஆண்டு ஊரக உள்ளாட்சி தேர்தல் மட்டும் நடத்தப்பட்டது. அதுவும் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தொகுதி வரையைறை காரணம் காட்டி நடத்தப்படவில்லை.இந்நிலையில் கடந்த சட்டசபை தேர்தலின் போது திமுக ஆட்சிக்கு வந்தவுடன் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உறுதியளித்தார். அதன்படி பதவியேற்ற உடனேயே உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கான பணிகளை முடுக்கி விட்டார்.

இதையடுத்து தமிழகத்தில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் கடந்த அக்.6,9ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. தமிழகத்தில் மொத்தம் 9 மாவட்டங்களில் மாவட்ட ஊராட்சிகளில் 153 வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றியங்களில் 1421 வார்டு கவுன்சிலர்கள், 3007 கிராம பஞ்சாயத்து தலைவர்கள், இந்த கிராம பஞ்சாயத்துக்களில் 23,211 வார்டு உறுப்பினர்கள் ஆக மொத்தம் 27,792 பதவிகளுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. இதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 9ம் தேதி நடந்தது. இதையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சான்றிதழ்கள் வழங்கினர். இந்நிலையில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் அந்தந்த ஊராட்சிகளில் நாளை (20ம் தேதி) பதவியேற்கின்றனர். இதற்காக அனைத்து ஊராட்சிகளிலும் தடபுடலாக ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

கடந்த 5 ஆண்டுகளாக உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாத நிலையில் பதவியேற்பு விழாவை முன்னிட்டு உள்ளாட்சிகளில் ஷாமியானா போடப்பட்டு தோரணங்கள் கட்டப்பட்டு காட்சியளிக்கிறது. கிராம பஞ்சாயத்து அலுவலகங்கள் வெள்ளை வர்ணம் பூசப்பட்டு, பதவியேற்பு விழாவிற்காக பளிச்சென்று காட்சியளிக்கிறது. நாளை பதவியேற்றுக் கொண்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் வருகிற 22ம் தேதி நடக்கும் மறைமுக தேர்தலில் வாக்களிப்பர். 22ம் தேதி 9 மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், 9 மாவட்டங்களில் இடம் பெற்றுள்ள ஊராட்சி ஒன்றியங்களின் தலைவர்கள், துணைத்தலைவர்கள், 3002 கிராம பஞ்சாயத்துகளில் துணைத்தலைவர்கள் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடக்கிறது. மறைமுக தேர்தலை முன்னிட்டு பிரச்னை ஏற்படும் என்று கருதப்படும் இடங்களில் மறைமுக தேர்தலை வீடியோ மூலம் பதிவு செய்யவும், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவும் மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு மாநில தேர்தல் ஆணைய செயலாளர் சுந்தரவள்ளி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: