இடதுபுறத்தில் மட்டுமே உணவிற்காக பஸ்களை நிறுத்த வேண்டும்: டிரைவர்களுக்கு போக்குவரத்து துறை உத்தரவு

நெல்லை: தொலைதூர பயணங்களின்போது பயணிகள் உணவருந்தும் வகையில் அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் 2 அல்லது 3 இடங்களில் உணவகங்கள் முன்பு நின்று செல்வது வழக்கமாக உள்ளது. இதில் சில டிரைவர்கள் தங்களுக்கு பிடித்தமான உணவகங்களை கருத்தில் கொண்டு நான்கு வழிச்சாலையில் எதிர்புறமுள்ள ஓட்டல்களுக்கு பஸ்களை திருப்பி செல்கின்றனர். இதனால் சில சமயங்களில் விபத்துகளும் நடக்கின்றன. இதுகுறித்து பயணிகள் தரப்பில் பல்வேறு புகார்கள் போக்குவரத்து துறைக்கு சென்றன.

இந்நிலையில் போக்குவரத்து துறை சார்பில் அரசு விரைவு பேருந்தின் கிளை மேலாளர்கள் மற்றும் கோட்ட மேலாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: அரசு விரைவு பேருந்துகள், பயணத்தின்போது பயணிக்கும் திசையின் இடதுபுறங்களில் உள்ள உணவகங்களில் மட்டுமே பயணிகள் உணவு அருந்த நின்று செல்ல வேண்டும். இடதுபுறம் நிற்காமல், எதிர்திசையில் உள்ள உணவகத்திற்கு வாகனத்தை திருப்பும்போது விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. எனவே கட்டாயம் பஸ்களை இடதுபுறம் உள்ள உணவகத்தில்தான் நிறுத்திட வேண்டும். இதை மீறும் டிரைவர்கள், கண்டக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இத்தகைய நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More
>