ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சிவன் கோயில்களில் நாளை அன்னாபிஷேகம்

அரியலூர்: ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள சிவன் கோயில்களில் நாளை அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திரசோழன் பிரகதீஸ்வரர் கோயிலை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டினார். தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்ந கோயிலில் ஒரே கல்லில் ஆன நவக்கிரகம் மற்றும் ஒரே கல்லினால் ஆன சிவலிங்கம் உள்ளது. இக்கோயில் உலகப்பிரசித்தி பெற்று புராதன சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டு,  தொல்லியல்துறை  மூலம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த கோயிலில் உள்ள சிவலிங்கத்திற்கு, ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதம் பவுர்ணமியன்று அன்னாபிஷேகம் சிறப்பாக செய்யப்படுவது வழக்கம். 100 மூட்டை அரிசியால் சாதம் சமைக்கப்பட்டு, சிவலிங்கத்தின் மேல் சாத்தப்படும். அவ்வாறு சாத்தப்படும் ஒவ்வொரு சாதமும் ஒவ்வொரு சிவலிங்கத்தின் தன்மையைக் கொண்டதாக கூறப்படுவது ஐதீகம்.

நாளை ஐப்பசி பவுர்ணமி என்பதால் கோயிலில் காலை 7.30 மணியளவில் கணக்க விநாயகருக்கு அபிஷேகமும், 8.30 மணிக்கு தீபாராதனையும் காட்டப்படும். இதைத்தொடர்ந்து 9 மணிக்கு பிரகதீஸ்வரருக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டு, மதியம் 3 மணிக்கு அன்னம் சாத்த துவங்கப்படும். மீதம் உள்ள சாதம் ஆறு, ஏரி மற்றும் குளங்களில் உள்ள மீன்களுக்கு உணவாக அளிக்கப்படும். இதேபோல் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயில், திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோயில் உள்பட தமிழகத்தில் உள்ள எல்லா சிவன் கோயில்களும் நாளை அன்னாபிஷேகம் நடக்கிறது.

Related Stories: