யாரையும் சாதாரணமாக எடைபோடக்கூடாது உலக கோப்பை டி 20ல் அசத்தபோகுது ஆப்கானிஸ்தான்: காம்பீர் ஆரூடம்

புதுடெல்லி: ஐக்கிய அரபு மற்றும் ஓமனில் கடந்த 17ம்தேதி உலக கோப்பை டி20 தொடர் துவங்கியது. நவம்பர் 17ம்தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் இந்திய அணி முதல் போட்டியிலேயே பாகிஸ்தானை எதிர்கொள்வது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதன்பின்னர் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியையும் இந்தியா எதிர்கொள்கிறது. பாகிஸ்தானை விட, நியூசிலாந்து அணியே விராட் கோஹ்லி படைக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. அதேசமயம், ஆப்கானிஸ்தான் அணியையும் சாதாரணமாக எடை போடமுடியாது. உலகத் தரம் வாய்ந்த பந்துவீச்சாளர் ரஷீத் கான் அந்த அணியில் இருக்கிறார். அதுபோல், முகமது நபி உள்ளிட்ட சில சர்வதேச தரம் வாய்ந்த வீரர்களும் அந்த அணியில் இருக்கின்றனர். எனவே ஆப்கானிஸ்தான் அணியை சாதாரணமாக இந்தியா எடுத்துக் கொள்ளாது என்று எதிர்பார்க்கலாம்.

இந்நிலையில், ஆப்கானிஸ்தான் அணி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் அளித்த பேட்டியில், ”இந்தியாவுடன் முதல் போட்டியில் மோதுவதால், பாகிஸ்தானிடமிருந்து எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும். ஆனால், தற்போதைய நிலையில் பாகிஸ்தானை விட இந்திய அணியே வலிமையாக உள்ளது. டி20 கிரிக்கெட்டில் யார் வேண்டுமானாலும் யாரையும் வெல்ல முடியும். ஏனெனில் இது மிகவும் தனிப்பட்ட வடிவ கிரிக்கெட்டாகும். இங்கு நாம் எந்த அணியையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. உதாரணமாக, ஆப்கானிஸ்தானை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ரஷீத் கான் போன்றவர்கள் தொடரில் மிகப்பெரிய குழப்பங்களை உருவாக்கலாம். பாகிஸ்தானுடனும் அதே நிலைமை தான். அன்றைய தினம் சிறப்பானதாக இருந்தால், அவர்களும் நிச்சயம் தாக்கம் ஏற்படுத்துவார்கள். இந்த டி20 உலகக் கோப்பையில் ஒரு அணியைப் பற்றி நீங்கள் பேச விரும்பினால், அது ஆப்கானிஸ்தானாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன். அவர்கள் ரஷீத்கான், முஜீப் மற்றும் முகமது நபி போன்ற வீரர்களைப் பெற்றிருக்கிறார்கள். அவர்களை சாதாரண வீரர்களாக எடுத்துக்கொள்ள முடியாது. கடினமாக போராட வேண்டியிருக்கும். பல அணிகளுக்கு ஆப்கானிஸ்தான் சேதாரத்தை உருவாக்கலாம்” என்று கூறியுள்ளார்.

Related Stories:

More
>