'லடாக்கை தொடர்ந்து அருணாசல பிரதேசத்தை ஒட்டியும் சீன படைகள் குவிப்பு': இந்திய கிழக்கு பிராந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டேதகவல்..!!

இடாநகர்: லடாக்கை தொடர்ந்து அருணாசல பிரதேசத்தை ஒட்டிய எல்லை பகுதியிலும் சீனா படைகளை குவித்து வருவதாக இந்திய ராணுவத்தின் கிழக்கு பிராந்திய தளபதி மனோஜ் பாண்டே தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் அருகேயுள்ள லடாக் எல்லை மட்டுமின்றி வட கிழக்கு மாநிலங்களையொட்டியுள்ள பகுதிகளிலும் சீனா தனது படைகளை குவித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே, எல்லை பகுதியில் தனது வீரர்களின் எண்ணிக்கையை சீனா அதிகரித்து வருகிறது. இதனை கண்காணிக்கும் பணியில் முக்கிய நடவடிக்கையாக நவீன ட்ரோன் விமானங்களை இந்திய ராணுவத்தினர் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், அருணாசல பிரதேசத்தை ஒட்டியும் சீன படைகள் குவிக்கப்பட்டிருப்பதாக இந்திய கிழக்கு பிராந்திய ராணுவ தளபதி தகவல் தெரிவித்துள்ளார். அருணாசல பிரதேச மாநிலம் ரூபா என்ற இடத்தில் பேசிய அவர், எல்லை பகுதியில் சீன படைகள் குவிக்கப்பட்டு வருவதுடன் பயிற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளார். சில பகுதிகளில் சீனப்படை  ரோந்துப் பணியில் ஓரளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது ஆனால் ரோந்து முறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை. எனினும் எல்லையில் எத்தகைய சூழலையும் சமாளிக்க நமது ராணுவம் தயார் நிலையில் இருப்பதாகவும், முப்படைகளும் இணைந்து தாக்குதல் நடத்தும் புதிய போர் முறைகளை கடைபிடிக்க கொள்கை அளவிலான ஒப்புதல் தரப்பட்டுள்ளதாகவும் தளபதி மனோஜ் பாண்டே தெரிவித்தார்.

எந்த அவசர சூழலையும் சமாளிக்க எல்லை நெடுகிலும் போதிய படை வீரர்களை நிறுத்தியுள்ளதாகவும், கண்காணிப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். சீனாவும், பூட்டானும் தங்களுக்குள் உள்ள எல்லை பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர முயற்சி செய்வதை இந்தியா கூர்ந்து  கவனித்து வருவதாகவும் கிழக்கு பிராந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டே கூறினார்.

Related Stories:

More
>