மழை ஓய்ந்ததால் குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்தது

தென்காசி:  குற்றாலம் பகுதியில் நேற்று மழையில்லாததால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு குறைந்தது. குற்றாலம் உள்ளிட்ட மேற்குத் தொடர்ச்சி மலை பகுதியில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வந்தது. பகல் முழுவதும் தொடர்ந்து பெய்த மழை காரணமாக அருவிகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மெயினருவியில் பாதுகாப்பு வளைவு, தடாகத்தை தாண்டி பாலத்தின் மீது தண்ணீர் கொட்டியது. ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பழைய குற்றால அருவியில் படிக்கட்டுகளில் வெள்ளநீர் கரைபுரண்டு ஓடியது.

இந்நிலையில் நேற்று காலை முதல் மழை ஓய்ந்தது. பகலில் லேசான வெயில் காணப்பட்டது. இதையடுத்து வெள்ளப்பெருக்கு சற்று கட்டுக்குள் வந்தது. எனினும் மெயினருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவி, சிற்றருவி, புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் அதிகமாக  விழுகிறது. கொரோனா தொற்று மற்றும் ஊரடங்கு காரணமாக அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்ட தடை தற்போதும் தொடர்கிறது.

Related Stories:

More
>