கள்ளக்குறிச்சி மரசிற்பத்திற்கு புவிசார் குறியீடு: தமிழக அரசு வழங்கியது

* உலகளவில் போற்றக்கூடிய மரசிற்பமாக அமைந்ததாக கைவினை கலைஞர் பெருமிதம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மரசிற்பத்துக்கு புவிசார் குறியீடு தமிழக அரசு வழங்கி உள்ளது. இதனால் சிற்ப தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளக்குறிச்சி அண்ணா நகர், தென்கீரனூர், ஜேஜே  நகர்,சின்னசேலம், திருக்கோவிலூர், நயினார்பாளையம், தகடி, கூத்தனூர் ஆகிய  பகுதிகளில் 500 க்கும் மேற்பட்ட மரசிற்ப கலைஞர்கள் உள்ளனர். கடந்த 50  ஆண்டுகளாக மரசிற்ப கைவினைத்தொழிலை குல தொழிலாக பாரம்பரியமாக தயாரித்து  விற்பனை செய்து வருகின்றனர். இவர்களுடன் விஸ்வகர்மா சமுதாயத்தினரும் இந்த  கைவினைத்தொழிலை செய்து வருகின்றனர். இதற்கு முன்னதாக முன்னோர்கள் கிராமம்  கிராமமாக சென்று கோயில் தேர் செய்து கொடுத்து வந்தனர். தற்போது கோயில்  தேர், கோயில் உற்சவ மூர்த்தி, சாமிசிலைகள் மற்றும் வீட்டுக்கு தேவையான  அலங்கார பொருட்கள் மரசிற்பத்தால் பல வண்ணங்களில் மக்களின்  விருப்பத்திற்கேற்ப தயாரித்து விற்பனை செய்து வருகின்றனர்.

 இந்த  மரசிற்பங்கள் பெங்களூரு, டெல்லி, மும்பை, ஹைதராபாத், ஜெய்ப்பூர் ஆகிய  மாநிலங்களுக்கும்  வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதாவது  அமெரிக்கா, லண்டன், ஜெர்மன், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கும் மரசிற்பங்கள்  ஏற்றுமதி செய்யப்படுகின்றன.    

மரசிற்பங்கள் விற்பனை தரம்  உயர்த்த வேண்டி சென்னை கிண்டியில் உள்ள புவியியல் குறியீடுகள் பதிவுத்துறை  அலுவலகத்தில் கடந்த 05.07.2013 ம் ஆண்டில் கள்ளக்குறிச்சி மரசிற்பம்  தயாரிப்போர் கைவினைத்தொழிலாளர் தொழிற்கூட்டுறவு சங்கம் மற்றும்  கள்ளக்குறிச்சி அண்ணா நகர் விருக்ஷா மரசிற்ப கைவினை தொழில் கூட்டமைப்பு  ஆகியோர் சார்பில் புவிசார் குறியீடு வழங்கிட வேண்டி  விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. அதனை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட தமிழக அரசு  அதற்கான ஆய்வுகள் முடிந்து கடந்த மாதம் 14 ம்தேதி கள்ளக்குறிச்சி  மரசிற்பத்திற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இதுகுறித்து  கள்ளக்குறிச்சி மரசிற்பம் தயாரிப்போர் கைவினைத்தொழிலாளர் தொழிற்கூட்டுறவு  சங்க தலைவர் சக்திவேல் கூறுகையில் சென்னை பூம்புகார் தமிழ்நாடு  கைத்திறத்தொழில் வளர்ச்சி கழகம் வாயிலாக கள்ளக்குறிச்சி மரசிற்பம்  சங்கத்தின் சார்பில் தமிழக அரசிடம் புவிசார் குறியீடு வழங்கிட வேண்டி கடந்த  2013 ம் ஆண்டு விண்ணப்பிக்கப்பட்டன.

அதனையடுத்து கடந்த மாதம் 14 ம்தேதி  புவிசார் குறியீடு தமிழக அரசால் வழங்கப்பட்டது. இதனால் கள்ளக்குறிச்சி,  சின்னசேலம், திருக்கோவிலூர் உள்ளிட்ட பகுதியில் வசிக்கும் 500 க்கும்  மேற்பட்ட மரசிற்ப கைவினை கலைஞர்களின் வாழ்க்கை தரம் உயரும் விதமாக  

அமைந்துள்ளது. மேலும் புவிசார் குறியீடு கிடைத்ததையடுத்து இங்கு உற்பத்தி  செய்யப்படும் மரசிற்பங்கள் உலக அளவில் போற்றப்படும் மரசிற்பமாக தரம்  உயரும். இதனால் இப்பகுதிகளில் உள்ள மரசிற்ப கலைஞர்கள் புவிசார் குறியீடு  கிடைத்ததை பெருமையாக கருதுகின்றோம். மேலும் கள்ளக்குறிச்சி மரசிற்பத்திற்கு  புவிசார் குறியீடு வழங்கி தமிழக அரசுக்கு நன்றியினை தெரிவித்துகொள்கிறோம்  என்றார்.

புவிசார்குறியீடு பெற்ற தமிழக பொருட்கள்

பண்ருட்டி பலா, பழனி பஞ்சாமிர்தம், தூத்துக்குடி மக்ரூன், உப்பு, காஞ்சிபுரம் பட்டுச் சேலை, திருப்பதி லட்டு, கோவில்பட்டி கடலை மிட்டாய், வில்லிப்புத்தூர் பால்கோவா, காரைக்குடி கண்டாங்கி சேலை, மதுரை மல்லிகைப் பூ, மதுரை சுங்குடி சேலை, மஞ்சள் மாவட்டம் என்று அழைக்கப்படும் ஈரோடு, சேலம் மாம்பழம், தஞ்சாவூர் ஓவியப் பாணி, தஞ்சாவூர் வீணை, தலையாட்டி பொம்மை, கலைத்தட்டு, நெட்டி மாலை, ஆம்பூர் பிரியாணி, பத்தமடை பாய், கும்பகோணம் பாக்குச் சீவல், காபி, வெற்றிலை  மற்றும் பல பொருட்கள் புவிசார் குறியீடு பெற்றுள்ளன.

புவிசார் குறியீடு பயன்கள்

குறிப்பிட்ட புவிசார்ந்த இடத்தையோ அல்லது தோற்றத்தையோ குறிக்கும்படி ஒரு பொருளின் மீது பயன்படுத்தப்படும் பெயர் அல்லது சின்னம் புவிசார் குறியீடு (Geographical indication) எனப்படும். இந்த குறியீடு, அந்த பொருள் புவிசார்ந்து பெறும் தரத்தையோ, நன்மதிப்பையோ பறை சாற்றும் சான்றாக விளங்கும். இவ்வாறு புவிசார் குறியீடு பெற்றிருக்கும் பொருளை சம்பந்தப்பட்ட ஊரைத் தவிர மற்ற இடங்களில் தயாரித்து சந்தைப்படுத்த முயல்வோர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும்.உலக வணிக அமைப்பின் (WTO) உறுப்புநாடான இந்தியாவில் புவிசார் குறியீடுகள் சட்டம் (பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம்) ஆண்டு, 1999 நிறைவேற்றப்பட்டு செப்டம்பர் 2003 இல் நடைமுறைக்கு வந்தது. இந்தியாவில் பொருட்கள் தொடர்பான புவிசார் குறியீடுகள் பதிவு மற்றும் பாதுகாப்புக்கு இந்த சட்டம் வழி வகுக்கிறது.

Related Stories: