திருவண்ணாமலை வேடியப்பன் கோயிலில் அண்ணாமலையார் கோயில் வரலாற்று கல்வெட்டு, சோழர்கால நடுகல் கண்டெடுப்பு: 9ம் நூற்றாண்டைச் சேர்ந்தது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை வேடியப்பன் கோயிலில் 9ம் நூற்றாண்டை சேர்ந்த சோழர் கால நடுகல், அண்ணாமலையார் கோயில் வரலாற்று கல்வெட்டு ண்டெடுக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் துணைத்தலைவரும், கூடலூர் அரசு கலைக்கல்லூரி முதல்வருமான வே.நெடுஞ்செழியன் அளித்த தகவலின் படி, திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தைச் சேர்ந்த ச.பாலமுருகன், எ.சுதாகர், பழனிசாமி, மதன்மோகன் ஆகியோர், திருவண்ணாமலை திண்டிவனம் சாலை அருகே அமைந்துள்ள வேடியப்பன் கோயிலில் ஆய்வு செய்தனர்.அப்போது, அங்கிருந்த நடுகல், முதலாம் பராந்தகன் நடுகல், கோயிலுக்கு எதிரில் உள்ள சிலையில் ஒருவரி கல்வெட்டு ஆகியன கண்டறியப்பட்டன.இதுகுறித்து, வரலாற்று ஆய்வு நடுவத்தின் தலைவர் செயலாளர் பாலமுருகன் தெரிவித்திருப்பதாவது:

வேடியப்பன் கோயிலில் கண்டெடுத்த நடுகல் மற்றும் கல்வெட்டு கி.பி. 928ம் ஆண்டைச் சேர்ந்தது. அதில், பராந்தகன் இருமுடி சோழனுக்கும், அவரது மனைவி செம்பியன் மாதேவிக்கும் பிறந்தவர் கண்டராதித்த சோழர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பகுதியை ஆட்சி செய்த வாணகோவரையரின் மகன் செம்பியன் மகாதேவி என்பது குறிப்பிடத்தக்கது.

திருக்கோவிலூர் அருகே உள்ள கரடி என்ற ஊரில், கிபி 947ல் எழுதப்பட்டுள்ள முதலாம் பராந்தகன் கல்வெட்டில், சோழ மாதேவி என்பவரும் மகனாகப் பிறந்தவர் கண்டராதித்தர் என்று கூறுகிறது. எனவே, செம்பியன் மாதேவி மற்றும் சோழ மாதேவி என்பது ஒருவரையே குறிப்பது உறுதியாகிறது. மேலும், அண்ணாமலையாருக்கு மதிய உணவு பூஜை படையலின், 20 கபாலிக துறவிகளுக்கும் உணவு கொடுக்கப்பட வேண்டும் என்பதற்காக, வைச்சபூண்டி என்ற ஊர் முழுவதையும் துறவிகளுக்கு கண்டராதித்த சோழர் கொடுத்துள்ளார். எனவே, கபாலிக சைவ வழி துறவிகளையும் இவர் ஆதரித்துள்ளார் என தெரிகிறது.வைச்சபூண்டி கிராமத்தில் இருந்து கிடைக்கும் வரி, பொன் மற்றும் நிலங்களை சைவவழி துறவிகள் நலனுக்கு பயன்படுத்த வேண்டும் என்ற விபரங்களும் இதில் உள்ளது. வைச்சபூண்டி கிராமத்தை கபாலிகர்களின் கையில் இருக்கும் கபால ஓட்டில் நீர் வார்த்து, கண்டராதித்தர் தர்மமாக கொடுத்துள்ளார். காளாமுகம், கபாலிகம் ஆகிய சமய பிரிவுகள் திருவண்ணாமலை பகுதியில் பரவி விளங்கியதை இக்கல்வெட்டு உணர்த்துகிறது.

கண்டராதித்த சோழர் வைரமேக வாணகோவரையர் குடும்பத்து இளவரசிக்கு பிறந்தவர் என்பதும், பராந்தக சோழருக்கு இருமுடி சோழன் என்ற பட்டம் இருந்ததும் இக்கல்வெட்டால் அறிய முடிகிறது.மேலும், இங்குள்ள நடுகல்லில் வீரன் தனது வலது கையில் குறுவாளும் இடது கையில் வில்லும் வைத்துள்ளார். வீரனின் தலையில் கரண்ட மகுடமும், காதில் பெரிய குண்டமும், இடுப்பில் கச்சை ஆடையும் வாள் உறையும் உள்ளது. இரண்டு கால்களும் மடக்கி எதிரியை தாக்க ஓடுவது போல அழகுடன் அமைந்துள்ளது.இந்த கோயிலின் எதிரில் உள்ள சிறிய அளவு சிற்பத்தில், ஆண், பெண் என இரண்டு உருவங்கள் உள்ளன. அதன் மேல்பகுதியில் உள்ள கல்வெட்டில் மாஹேஸ்வர நம்பி என்று பொறிக்கப்பட்டுள்ளது. இவர், சிவ பக்தராக இருக்கலாம்.

இந்த கல்வெட்டைப் படித்து விளக்கம் அளித்துள்ள கல்வெட்டு அறிஞர்கள் சு.ராகோபால் மற்றும் இல.தியாகராஜன், சு.ராஜவேல் ஆகியோர், இந்த கல்வெட்டு அரிய புதிய செய்திகளைக் கொண்டிருக்கும் சிறப்பான கல்வெட்டு என தெரிவித்துள்ளனர்.மேலும், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வரலாறு பற்றியும், வைச சமயப் பிரிவான கபாலிகம், காளமுகம் பற்றியும், கண்டராதித்தன் பிறப்பு பற்றியும் குறிப்பிடும் சிறப்பான கல்வெட்டுக்களை அரசு ஆவணப்படுத்தி பாதுகாக்கவேண்டும் என வரலாற்று ஆர்வலர் எதிர்பார்க்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: