குலசையில் 3 நாட்களுக்கு பிறகு அனுமதி: முத்தாரம்மன் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்: கடற்கரையில் புனித நீராடி மாலை கழற்றினர்

உடன்குடி:  குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவை முன்னிட்டு கடந்த மூன்று நாட்களுக்கு பிறகு தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டதால்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு சுவாமி  தரிசனம் செய்தனர். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கடந்த 5ம்தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 16ம்தேதி நள்ளிரவு திருக்கோயில் முன் பிரகார மண்டபத்தில் நடந்தது. இதையொட்டி கடந்த 3நாட்களாக பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் நேற்று காலை முதல் தரிசனம் செய்ய மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது. பல்வேறு பகுதிகளிலிருந்து கார், வேன், லாரி, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் குலசேகரன்பட்டினத்தில் பக்தர்கள் குவிந்தனர்.

ஏராளமான பக்தர்கள்  வேடத்துடனும், தீச்சட்டி ஏந்தியும் கோயிலில் வழிபட்டு, வசூலித்த காணிக்கைகளை உண்டியலில் செலுத்தினர். தீச்சட்டி ஏந்திய பக்தர்கள் தீச்சட்டிகளை கடற்கரையில் வைத்து விட்டு விரதத்தை முடித்தனர். மேலும் விரதமிருந்து அணிந்த பாசி மாலைகள், காப்புகளை கோயிலுக்கு வந்திந்த காளி வேடம் அணிந்த பக்தர்களே காப்புகளை அறுத்ததுடன், மாலைகளை கழற்றினர். கடந்த 15 நாட்களுக்கும் மேலாக சிதம்பரேஸ்வரர் கடற்கரை பகுதிக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. நேற்று  அனுமதி அளிக்கப்பட்டதையடுத்து ஏராளமான பக்தர்கள் கடற்கரையில்  புனித நீராடி சுவாமி  தரிசனம் செய்தனர்.

Related Stories: