எழுதி கொடுத்துவிட்டுத்தான் இணைந்தார் சசிகலா அரசியல் பேசாமல் இருந்தால் ஜெயலலிதா ஆன்மா சாந்தியடையும்: குடியாத்தத்தில் கே.பி.முனுசாமி பேட்டி

குடியாத்தம்: சசிகலா அரசியல் பேசாமல் இருந்தால் ஜெயலலிதா ஆன்மா சாந்தியடையும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனிசாமி கூறினார். தமிழகத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்பட 9 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுகவினருக்கு பாராட்டு மற்றும் ஆலோசனை கூட்டம் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கந்தநேரியில் உள்ள மாவட்ட புறநகர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனிசாமி கலந்து கொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: அதிமுகவிற்கும், சசிகலாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஜெயலலிதா மீது உண்மையான பற்று இருந்தால் சசிகலா இனி அரசியல் பேசக்கூடாது. அவர் கட்சிக்கு தொண்டராக வரவில்லை, ஜெயலலிதாவிற்கு உதவியாளராக வந்தவர். காமராஜர், மகாத்மா காந்தி போன்றவர்களுக்கும் பலர் உதவியாளர்களாக இருந்துள்ளனர். அவர்கள் யாரும் அரசியலுக்கு வரவில்லை.

ஜெயலலிதாவிடம் இருந்து பிரிந்த சசிகலா மீண்டும் ஜெயலலிதாவிடம் சேரும்போது ‘‘நானோ, எனது உறவினர்களோ அரசியலில் ஈடுபட மாட்டோம்’’ என எழுதிக் கொடுத்துவிட்டுத்தான் மீண்டும் ஜெயலலிதாவுடன் இணைந்தார். அந்த வாக்கை சசிகலா நிறைவேற்ற வேண்டும்.

சசிகலா இனி அரசியல் பேசாமல் இருந்தாலே ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தி அடையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Stories:

More
>