உடல்நலம் பாதித்ததால் மறந்து போன கொடுமை: பணமதிப்பிழப்பால் பயனற்று போனது பிச்சைக்காரர் சேமித்து வைத்த 65ஆயிரம்: கடைசி காலத்திற்காக சிறுக சிறுக சேர்த்தேன்: கண்பார்வையற்றவர் கண்ணீர் விட்டு தவிப்பு

கிருஷ்ணகிரி: கடந்த ‘‘2016, நவம்பர் 8ம் தேதி -பல்லாண்டுகளாக வழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1000 நோட்டுகள் செல்லாது என்று ஒன்றிய அரசு அறிவித்த நாள்’’. 5ஆண்டுகளுக்கு பிறகும் அதன் பாதிப்பு தொடர்கிறது.  கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா பாவக்கல் ஊராட்சி, சின்னகவுண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னகண்ணு (65). பார்வையற்ற மாற்றுத்திறனாளியான இவர், நேற்று  கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:  சின்னகவுண்டனூர் கிராமத்தில் உள்ள அரசு இடத்தில், குடிசை அமைத்து ஆதரவற்ற நிலையில் வசித்து வருகிறேன். எனக்கு 5 வயதிலேயே கண்பார்வை பறி போய் விட்டது. அதனால், வாழ வழியின்றி பிச்சை எடுத்து வந்தேன். பிச்சை எடுத்ததன் மூலம் பணம் 65 ஆயிரம் சேர்த்து வைத்திருந்தேன்.

எனக்கு கடந்த 5ஆண்டுகளுக்கு முன்பு கடுமையான உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயக்க நிலைக்கு தள்ளப்பட்டேன். ஊர்மக்கள் உதவியுடன் நீண்ட நாட்கள் சிகிச்சையில் இருந்து மீண்டு வந்தேன். இடைப்பட்ட காலத்தில் நான் பிச்சை எடுத்து ஆங்காங்கே சேமித்து வைத்த பணம் எங்கே இருக்கிறது என்பதையே மறந்துவிட்டேன். இந்தநிலையில் பெரும் சிரமத்திற்கு பிறகு சேமித்த பணம் 65ஆயிரத்தை தேடி எடுத்தேன். அதை எனக்கு தெரிந்தவர்களிடம் காட்டியபோது, இந்த ரூபாய் நோட்டுகள் இப்போது செல்லாது என்று கூறி விட்டனர். கண்பார்வை இல்லாத நான், என்னுடைய கடைசி காலத்தில் அந்த பணத்தை கொண்டு நிம்மதியாக வாழலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் தற்போது பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பதால் என்ன செய்வதென்று  தெரியவில்லை. எனவே, என்னிடம் உள்ள பழைய ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக புதிய நோட்டுகளை மாற்றி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு சின்னக்கண்ணு மனுவில் தெரிவித்துள்ளார்.

Related Stories: