போலீசுக்கு தெரியாமல் உடல் எரிப்பு: மகளை ஆணவக்கொலை செய்த தாய், தந்தை கைது: பரமக்குடி அருகே பயங்கரம்

பரமக்குடி: பரமக்குடி அருகே மகளை ஆணவக்கொலை செய்த பெற்றோர் கைது செய்யப்பட்டனர். ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நண்டுப்பட்டியை சேர்ந்தவர் தென்னரசு. இவரது மகள்  கவுசல்யாவுக்கும் (23) பரமக்குடி அருகே செவ்வூரை சேர்ந்த கனகராஜ் என்பவருக்கும் 4  ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. 4 மாதங்களுக்கு முன்பு  கணவன், மனைவி இருவரும் கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டனர். கவுசல்யா நண்டுபட்டியில் உள்ள தந்தை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 16ம் தேதி கவுசல்யா   எலி மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக கூறி, அவரது பெற்றோர்  பரமக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இரண்டு நாள் சிகிச்சை பெற்ற நிலையில், மருத்துவர்களுக்கு தெரியாமல்  திடீரென மகளை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்றுவிட்டனர்.

அங்கு கவுசல்யா இறந்ததால் போலீசுக்கு தெரிவிக்காமல் உடலை எரித்து விட்டனர். இதுபற்றி விஏஓ ஹேமா கொடுத்த  புகாரின் பேரில் எமனேஸ்வரம் போலீசார் சந்தேக மரணம் என  வழக்கு பதிவு செய்தனர். பரமக்குடி டிஎஸ்பி வேல்முருகன் தலைமையிலான போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதில், கணவரை பிரிந்த கவுசல்யா, வேறு சமூக இளைஞருடன் பழகியதால் பெற்றோர் கண்டித்துள்ளனர். ஆனால் அவர் கேட்க மறுத்ததால் ஆத்திரமடைந்த பெற்றோர், மூச்சை பிடித்து இறுக்கி கொலை செய்து எரித்தது தெரியவந்தது. இதையடுத்து தந்தை தென்னரசு (58), தாய் அமிர்தவள்ளி (48) ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்தவர்களிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. பரமக்குடி பகுதியில் நடந்த இந்த ஆணவக்கொலை  பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

More
>