சேலத்தில் கொடூரமாக கொலை செய்யப்பட்டவர்: மசாஜ் சென்டர் இளம்பெண்ணை ரகசியமாக சந்தித்த போலீஸ் அதிகாரிகள்: பரபரப்பு தகவல்கள்

சேலம்: சேலத்தில் மசாஜ் சென்டர் இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அவர் தங்கியிருந்த அறைக்கே சென்று ரகசியமாக சந்தித்து போலீஸ் அதிகாரிகள் பேசிய விவரம் தற்போது வெளியாகியுள்ளது.  சேலம் வின்சென்ட் பகுதியில் உள்ள அதிமுக பிரமுகர் நடேசனுக்கு சொந்தமான காம்ப்ளக்ஸில் மசாஜ் சென்டர் நடத்திய தேஜ் மண்டல் (26) என்ற இளம்பெண், கொடூரமாக கொலை செய்யப்பட்டு, சூட்கேசில் அடைக்கப்பட்டு பரண் மீது வீசப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டதில், கால், கை, முகம் ஆகிய இடங்களில் துணியால் சுற்றப்பட்டு, மூச்சு திணற வைத்து கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.  அதே நேரத்தில் ரசாயன பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட உடல் உறுப்புக்களின் முடிவு வந்த பிறகு தான், முழு தகவலையும் தெரிவிக்க முடியும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தேஜ் மண்டல் மற்றொரு அறையில் தங்க வைத்திருந்த 4 பேரில் நிஷி, லப்லு ஆகிய இருவரும், வங்கதேசம் தப்பி சென்று விட்டனர். மேலும் 2 பெண்கள் தலைமறைவாகி விட்டனர்.

வீட்டில் இருந்த கேமராவை, தலைமறைவான லப்லு வேறு பக்கமாக திருப்பி வைத்து விட்டு சென்றுள்ளது தெரியவந்துள்ளது. எனவே, இந்த கொலையை லப்லு, நிஷி ஆகியோர் கொண்ட குழுவினர் தான் செய்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் போலீசாருக்கு வலுத்துள்ளது.   தேஜ் மண்டலின் சென்னை காதலன் பிரதாப்பிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது. சென்னையில் வேலை செய்து வந்த பிரதாப், அங்குள்ள மசாஜ் சென்டருக்கு சென்ற போது, தேஜ் மண்டலுடன் பழக்கம் ஏற்பட்டது. இதனால், தேஜ் மண்டலை சேலம் அழைத்து வந்த பிரதாப், மசாஜ் சென்டர்களை தொடங்கினார். இதற்காக வறுமையில் இருக்கும் இளம்பெண்களை வலையில் வீழ்த்தி, மசாஜ் சென்டருக்கு பயன்படுத்திக் கொண்டனர்.  முதலில் அழகாபுரத்தில் ஸ்பா சென்டரை தொடங்கினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ரவுடி ஒருவர், மாமூல் கேட்டு மிரட்டியதால், அந்த இடத்தை காலி செய்துவிட்டு அங்கம்மாள் காலனி, சங்கர் நகரில் ஸ்பா மையத்தை தொடங்கினர். அங்கம்மாள் காலனியில் உள்ள சென்டர் மூலம் வரும் பணம் அனைத்தும், பிரதாப்பின் வங்கி கணக்கிற்கு சென்றுவிடும். இதேபோல், சங்கர் நகரில் உள்ள சென்டர் மூலம் வரும் பணம், தேஜ் மண்டலுக்கு செல்லும்.

இந்நிலையில், போலீசார் அங்கம்மாள் காலனியில் உள்ள ஸ்பாவில் சோதனை நடத்தி, பிரதாப் மீது வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து அவர் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிப்பதற்கு போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.  அதே போல், தேஜ் மண்டலின் ஸ்பாவில் சோதனை நடத்திய போது, அங்கிருந்த இளம்பெண்ணை கைது செய்த போலீசார், தேஜ் மண்டல் மீது வழக்கு பதிவு செய்யவில்லை. தேஜ் மண்டலிடம் பணப்புழக்கம் அதிகளவில் இருந்துள்ளது. நிஷியும், லப்லுவும் அவரிடம் 2 லட்சம் வாங்கியுள்ளனர். இந்த பணத்தை தேஜ் மண்டல் திரும்ப கேட்ட போது தான், அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. லப்லு ஆண்கள் மற்றும் இளம்பெண்களை பேசி அழைத்து வரும் புரோக்கராக செயல்பட்டு வந்துள்ளார். இதனால் தேஜ் மண்டலிடம் அதிக பணம் இருந்ததை தெரிந்து கொண்ட லப்லு, நிஷி ஆகியோர் கூட்டாக சேர்ந்து, தேஜ் மண்டலை தீர்த்துக்கட்டி இருக்க வேண்டும் என சந்தேகம் எழுந்துள்ளது.

தேஜ் மண்டலின் ஸ்பா சென்டரில் கைதாகி, சிறையில் அடைக்கப்பட்ட இளம்பெண் தற்போது ஜாமீனில் வந்துள்ளார். அவரிடம் விசாரணை நடத்தியதில் பரபரப்பு தகவல்களை தெரிவித்துள்ளார். சிறையில் அடைக்கப்பட்ட அந்த இளம்பெண், ஜாமீனில் வந்த நேரத்தில் அவரின் தாயார் இறந்து விட்டார். இதற்கு உதவி கேட்டு தேஜ் மண்டலை சந்தித்த போது அவர், தன் மீது வழக்கு பதிவு  செய்யாமல் இருப்பதற்காக, போலீசாருக்கு 1 லட்சம் வரை செலவு செய்துள்ளேன் என கூறி, அனுப்பி விட்டதாக அந்த இளம்பெண் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற ஸ்பா மையங்களில் பாலியல் தொழில் நடைபெற்றால், போலீசார் சோதனை நடத்தும் போது உரிமையாளர்கள், புரோக்கர்கள் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைப்பார்கள். ஆனால் பாலியல் தொழிலுக்கு  வந்த பெண்களை பாதிக்கப்பட்டவர்களாக மட்டுமே கருத வேண்டும். அவ்வாறு பிடிபடும் பெண்களை மீட்டு, அரசின் கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைப்பார்கள். பின்னர், அவர்களின் பெற்றோரை வரவழைத்து, நீதிமன்றம் மூலம் அனுப்பி வைப்பர். அதன்படி, இந்த ஸ்பா மையத்தில் இருந்த இளம்பெண்ணை பாதிக்கப்பட்டவராக கருத வேண்டும். ஆனால், அவரை கைது செய்த போலீசார், ஸ்பா மையத்தை நடத்தி வந்த தேஜ் மண்டல் மீது வழக்கு பதிவு செய்யாமல் இருந்துள்ளனர்.  இதற்கிடையில் 2 போலீஸ் அதிகாரிகள், தேஜ் மண்டல் தங்கியிருந்த அறைக்கே சென்று, பேசி வந்திருப்பதும் தெரியவந்துள்ளது.

Related Stories:

More
>