முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கையால் ராஜஸ்தானில் 100 கோடி பட்டாசு தேக்கம் தவிர்ப்பு: சிவகாசி ஆலை உரிமையாளர்கள் மகிழ்ச்சி

சிவகாசி: தமிழக முதல்வரின் நடவடிக்கையால் ராஜஸ்தானில் ரூ.100 கோடி பட்டாசு தேக்கம் தவிர்க்கப்பட்டது. இதனால் சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 1,070 பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த ஆலைகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். நாட்டின் மொத்த பட்டாசு தேவையில் சுமார் 90 சதவீத பட்டாசுகள் சிவகாசியில் உற்பத்தி செய்யப்படுகின்றன. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு ராஜஸ்தான், ஒடிசா, டெல்லி உள்ளிட்ட 7 மாநிலங்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டதால் சுமார் 2 ஆயிரம் கோடி அளவில் பட்டாசு தேக்கம் அடைந்தது. இதனால் இந்த ஆண்டு பட்டாசு உற்பத்தி முழு அளவில் நடைபெறவில்லை. கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் இந்தாண்டு பட்டாசு விற்பனை நன்றாக இருக்கும் என்று பட்டாசு உற்பத்தியாளர்கள் நம்பிக்கையுடன் இருந்தனர். நவ. 4ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் ராஜஸ்தான், டெல்லி, ஒடிசா, அரியானா மாநிலங்களில் பட்டாசு வெடிக்க அந்த மாநில அரசுகள் தடை விதித்தன. இது சிவகாசி பட்டாசு ஆலை உரிமையாளர்கள், தொழிலாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியது.

பட்டாசு வெடிக்க தடையை நீக்க வேண்டும் என்று நான்கு மாநில முதல்வர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக கடிதம் எழுதினார். தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று ராஜஸ்தான் மாநில அரசு, அந்த மாநிலத்தில் பட்டாசு வெடிக்க தடையை நீக்கியது. இதனால் சுமார் 100 கோடி ரூபாய் பட்டாசு தேக்கம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு பட்டாசு மற்றும் கேப் வெடி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சோனி கணேசன் கூறுகையில், ‘‘பட்டாசு வெடிக்க தடை விதித்த நான்கு மாநில முதல்வர்களுக்கும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ராஜஸ்தான் முதல்வர் அசோக்கெலாட்டிற்கு கடிதம் மூலமாகவும், தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொண்டு பட்டாசு விற்பனைக்கும் உபயோகத்திற்கும் அனுமதியை பெற்று தந்துள்ளார். பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை நிலை நிறுத்தி 8 லட்சம் பட்டாசு தொழிலாளர்கள் வாழ்க்கையில் ஒளியேற்றிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்’’ என தெரிவித்துள்ளார்.

பட்டாசு ஆலை உரிமையாளர் மதர்ஸ் கே.வி.கந்தசாமி கூறுகையில், ‘‘ராஜஸ்தான் மாநிலம்தான் சிவகாசியின் பெரிய பட்டாசு மார்க்கெட் என்று கூறலாம். கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் பட்டாசு வெடிக்க தடை இருந்தால் 100 கோடி ரூபாய் பட்டாசு தேக்கம் அடைந்திருக்கும். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்த முயற்சி காரணமாக பட்டாசு தொழில் பாதுகாக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று மாற்ற மாநிலங்களிலும் பட்டாசு தடை நீங்கும் என்ற நம்பிக்கையுடன் உள்ளோம்’’ என்றார்.

Related Stories: