லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனை: ஒடிசா எம்எல்ஏ வீட்டில் 1440 கிராம் தங்கம் பறிமுதல்

புவனேஸ்வர்: ஒடிசா எம்எல்ஏ பிரதீப் பனிகிராய் வீட்டில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 1440 கிராம் தங்கம், 24.25 லட்சம் மதிப்புடைய டிசைனர் நெக்லஸ் பறிமுதல் செய்யப்பட்டது. ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதா தள கட்சியின் கோபால்பூர் தொகுதி எம்எல்ஏ பிரதீப் பனிகிராய். இவர், அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக, லோக்ஆயுக்தா அமைப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், எம்எல்ஏ பிரதீப், மோசடி செய்தது உறுதியானது. இதனால், 7 மாதம் சிறையில் அடைக்கப்பட்ட பிரதீப், கடந்த ஜூனில் ஜாமீனில் வந்துள்ளார். மக்கள் விரோத நடவடிக்கைக்காக இவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் எம்எல்ஏ பிரதீப் வீடு மற்றும் அலுவலகங்கள் என புவனேஸ்வர் மற்றும் கன்சம் மாவட்டங்களில் 15 இடங்களில் சோதனை நடத்தினர். 2வது நாளாக நேற்றும் தொடர்ந்த இந்த சோதனையில் கணக்கில் வராத 1440 கிராம் தங்கம் மற்றும் 24.25 லட்சம் மதிப்பிலான டிசைனர் நெக்லஸ் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக அதிகாரிகள் கூறினர். மேலும் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. எம்எல்ஏ பிரதீப்பின் வங்கி கணக்கு உள்ளிட்டவை முடக்கப்பட்டுள்ளன. எனவே எம்எல்ஏ மீண்டும் கைதாவார் என கூறப்படுகிறது.

Related Stories:

More
>